நஒக - நான் அவள் இல்லை

நான் அவன் இல்லை கதையின் இன்னொரு ஆங்கிள்!!

ச்ச என்ன பையன் இவன் இத்தனை ரிங் அடிக்குது இன்னும் எடுக்காம? செல்லமாக சலித்துக்கொண்டேன்.

எத்தனையோ முறை சொல்லியிருக்கிறான் பதினொரு மணியிலிருந்து பனிரெண்டு வரைக்கும் போன் செய்தால் எடுத்து பேச கஷ்டம் எப்படியும் மீட்டிங் அது இது என ஆபீஸில் படுத்திக்கொண்டிருப்பார்கள் அதனால எஸ்.எம்.எஸ் அனுப்பு என. ஆனால் என் பேச்சை நானே கேட்பதில்லை போக்கிரி விஜய் போல. பின் எப்படி?

அவன் போனை எடுத்ததும் எனக்கே கேட்காத அளவு மெல்லிய குரலில் பேசினேன் ஏன் இப்படி இந்த மாற்றம் என எனக்கே புரியவில்லை.

இப்போதுதான் ஒரு வாரமாக அவனை தெரியும். சாதாரணமா ஆண்களைப்போல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமானவனாக. அவ்வப்போது தந்தையிடம் வழியில் பேசுவதை பார்த்திருக்கிறேன். நாங்கள் புதிதாக குடி வந்திருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கிறான்.

பால் காய்ச்சிய அன்று சிலிண்டர் கேட்டு சென்ற அப்பா அந்த வீட்டுல அந்த பையன் மட்டும் இருக்கான் அவங்க ஃபேமிலியெல்லாம் ஊர்ல இருக்காங்களாம் இங்க நாலஞ்சு வருசமா வேலை பாக்கிறானாம். ஒருத்தனுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு காசோட அருமை தெரியலை என்றெல்லாம் சொன்னார். இவர் வங்கியில் பணிபுரிவதால் எப்போதும் பணம் பற்றி பேசுவது இயல்பு.

கல்லூரியில் பெண்களிடம் வழியும் மாணவர்களையும், தேவையில்லை என்றால் கூட எதாவது காரணத்தை எடுத்துக்கொண்டு பேச அலையும் பையன்களையுமே பார்த்த எனக்கு இவன் வித்தியாசமாக தெரிந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

என்ன மாயம் செய்தானே மந்திரம் செய்தானோ அவனைப்பார்க்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு என்னையும் அறியாமலேயே. அவனிடம் மனதை பறிகொடுத்துவிட்டேன் என்பது எனக்கே தெரிகிறது. சரியா தவறா நல்லவனா கெட்டவனா எதையும் யோசிக்கும் நிலையில் நான் இல்லை. நான் நானாகவே இல்லை முதலில்.

எல்லாமே தலைகீழ்தான் . "கையை கழுவிவிட்டு சாப்பிடும் நான் இப்போதெல்லாம் சாப்பிட்டு கையை கழுவுகிறேன்". இப்படி பல. நண்பிகள் அனைவரும் சேர்ந்து என்னை தூண்டிவிட்டதில் எப்படி எப்போது அவன் காதலை ஒப்புக்கொண்டேன் என்பதும் மறந்துவிட்டது.

தந்தை என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையையும் பாசத்தையும் குலைக்க போகிறேன் என நினைக்கும் போது என் மேல் எனக்கே சிறிது வருத்தம் ஏற்பட்டாலும் அவனின் பால் கொண்ட காதல் மயக்கத்தில் அதெல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை.

இன்று காலையிலிருந்தே ஒரு படபடப்பு. காதல் படத்தில் வருமே பரத்தும், சந்தியாவும் பஸ் ஏறி சென்னைக்கு ஊரை விட்டு ஓடிப்போவது எல்லாம் நினைவுக்கு வந்தது. எல்லாம் நல்ல படியாக நடக்கவேண்டும் என்றைக்கும் விட இன்று இரண்டு நிமிடம் அதிகமாகவே கும்பிட்டேன். மதியம் ஒரு மணிக்கு ட்ரெயின் டிக்கெட் எல்லாம் கடைசி நிமிடத்தில் தக்கலில் எடுத்திருப்பதாக சொல்லியிருந்தான். சரியான நேரத்திற்குள் யாருக்கும் தெரியாமல் எப்படியும் போகவேண்டும்.

கன்னத்தில் கை வைத்து வாயை பிளந்து தூங்கி கொண்டிருந்தேன்.

ஹலோ ஹலோ எவ்வளவு நேரமா நான் கூப்பிட்டுகிட்டிருக்கேன் நீ உக்காந்து தூங்கிகிட்டிருக்கியே. தட்டி எழுப்பினாள் ராட்சசியாய் என் லெக்சரர்.