நஒக - ச்ச தப்பு பண்ணிட்டேன்

அழகான ராட்சசி அவளை பார்க்கும் எவரும் திரும்பி இன்னொரு முறை பார்க்காமல் இருந்ததில்லை இருக்கவும் முடியாது. களுக் என சிரிக்கும் அவளின் சிரிப்பில் பித்தாக அல்லவா இருக்கிறேன் நான்.

'குட்டி' பிசாசு அவள். எப்போதும் நான் அவளை அப்படித்தான் கிண்டல் செய்வேன். அவளிடம் எனக்கு பிடித்த பிடிக்காத ஒன்று எப்போதும் போடா, வாடா என 'டா' போட்டுத்தான் பேசுகிறாள். சரி எல்லாம் போக போக சரிபடுத்திடலாம்.

முரடா, பிடிவாதக்காரா, போக்கிரி என அவள் திட்டும்போதெல்லாம் செல்லமாகத்தான் திட்டுகிறாள் என நான் இருந்துவிடுவேன் அதையெல்லாம் உறுதிப்படுத்தும் விதமாக இன்று நடந்துகொண்டு விட்டேனே.

சில சமயம் எதாவது உளறுவாள் சில சமயம் ரொம்ப பெரிய மனுஷி போல கண்டதையும் பேசி அறுப்பாள். அதையெல்லாம் கவனித்தால்தானே நான் அவளின் சட்டையை பிடித்து இழுப்பது கிள்ளுவது என என் வேலையில் கவனமாக இருப்பேன்.

அவள் ஜீன்ஸ்ஸும் டீ சர்ட்டும் அனிந்து வரும் தினங்கள் இன்னும் வசதியாக போய்விடும் எனக்கு. இடுப்பு தெரியுமே!!. அவளுக்கும் பிடித்திருக்குமோ என்னவோ பெரும்பாலும் மறுக்க மாட்டாள்.

சில சமயம் இல்லை பல சமயங்கள் நினைத்துக்கொள்வேன் எப்படி இவளுக்கு மட்டும் எந்த ட்ரெஸ் போட்டாலும் நல்லா இருக்கு என. எந்த நிற உடைகளிலும் பெண்களே அழகு என்பது என்னவோ உண்மைதான்.

சில சமயம் கோவம் வந்து தலையில் 'நறுக்' என குட்டுவாள். வேறு லோகத்தில் சஞ்சரித்துவிட்டு அப்போதுதான் இந்த பூலோகத்திற்கு இறங்கி வருவேன் குட்டுப்பட்ட வலியில் தலையை அழுந்த தடவிய படியே!

பீச் என்ன, பார்க் என்ன, ஹோட்டெல் என்ன என்னை நம்பி அவள் வராத இடம் இல்லை. இத்தனைக்கும் அவள் வீட்டிற்கும் இது தெரியும். அவர்களும் என் மேல் இருந்த நம்பிக்கையில் இதுவரை என்னையோ அவளையோ இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதை ஒன்றும் சொன்னதில்லை. சில சமயம் டூ வீலரில் சில சமயம் ஆட்டோவில். எப்போது வெளிய போலாம்னு சொன்னாலும் ஓகே என அடுத்த பத்தாவது நிமிடத்தில் ரெடியாகிவிடுவாள்.

ச்ச என்ன இருந்தாலும் அவசரப்பட்டிருக்க கூடாது. தப்பு பன்னிட்டனே மனசு படபட என அடித்துக்கொண்டது. அடுத்த தடவை அவ முகத்துல எந்த முகத்தை வெச்சுகிட்டு முழிக்கிறது. என் மேல் எனக்கு கோவம் கோவமாக வருகிறது. எவ்வளவோ சொன்னாள் ஆனால் நான் தான் கேக்கவில்லை.

காலையில் அந்த நேரத்துக்கு நான் அவள் இருந்த அறைக்கு போயிருக்க கூடாது. அப்போதுதான் குளித்து முடித்து ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள் கதவை தாழிடாமலே

நான் நுழைந்ததை பிரோவில் இருக்கும் கண்ணாடி வழியாக பார்த்திருப்பாள் போல அதை நான் கவனிக்கவில்லை.

வேண்டாம் உதட்டில உவ்வா இருக்கு என கெஞ்ச கெஞ்ச பின்னாலிருந்து அனைத்தெடுத்து உதட்டில் முத்த்மிட்டுவிட்டேன் என் இரண்டு வயது அண்ணன் மகள் ரஷ்மியை.