கோலங்கள் கோலங்கள்

"அவள் போடும்
கோல அழகைவிட
அவள் கோலம் போடும்
அழகே அழகு"

கரண்ட் இல்லாமல் கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு கை ஒடிந்தது போலிருந்தபோது பழைய ஆனந்தவிகடனை புரட்டிகொண்டிருந்தேன். அப்போது படித்த கவிதை கு.நாகராஜ் என்பவர் ஏப்ரலில் எழுதியது. கரண்ட் வந்ததும் அதை ஸ்டேடஸ் மெஸ்ஸேஜாய் போட்டிருந்தேன்.

‘ராம்’ சாட்டில் வந்து இது பா.விஜய் எழுதின கவிதையா அப்படின்னு கேட்டார். இல்லன்னு சொல்லிட்டு கோலம் பற்றிய flash back ல் மூழ்கிவிட்டேன்.

நான் சின்ன பையனா இருக்கப்ப எங்க அம்மா சாமிக்கு முன்னாடி ஒரு ஸ்டார் கோலம் போடுவாங்க. உம்மாச்சிக்கு அதுதான் ஸ்டாண்டர்ட்.

வாசலில் அதிகபட்சமா நடு வரி 9 புள்ளி அதன் பிறகு இரண்டு பக்கமும் இரண்டிரண்டு புள்ளிகளாக குறைந்து வந்து ஒரு புள்ளியில் முடியும் அதில் முறுக்கு பிழிந்ததை போல ஒரு கோலம். அவர்கள் காலத்தில் அதுதான் பாட்டி சொல்லி கொடுத்திருந்தார்களா என தெரியாது.

பொங்கல், தீபாவளி வந்தால் என் அக்காள் தெருவையே கூட்டி பெருக்கி யாரும் நடக்க முடியாத அளவிற்கு தெருவையே அடைத்து கலரிங் எல்லாம் செய்து கோலம் போடுவாள். பின் அதில் ஹாப்பி பொங்கல், ஹாப்பி தீபாவளி என எழுதி வைப்பாள்.

நான் தூங்கி எழுந்து பார்க்கும் போது பாதி கோலம் அழிந்தே போயிருக்கும் இருந்தாலும் மிக அழகாக இருக்கும். என் ஊரில் அனேகமாக எல்லார் வீடுகளிலும் இது போல பெரிய பெரிய கோலங்கள் போடுவார்கள்.

எப்படி அம்மாவிற்கு இவ்வளவு பெரிய கோலமெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் இருந்தது. சில வருடங்களில் அதற்கான விடை கிடைத்தது.

அண்ணன், அக்கா, நான் எல்லாரும் கிராமத்திலேயே படித்ததால் ஒரே பள்ளியில்தான் படிப்பு. அவள் அப்போது 12ம் வகுப்பு. வீட்டில் படிப்பதற்க்காக நோட்டு நோட்டாக வாங்கி கொடுக்க அவள் பள்ளியில் அவள் தோழிகளுடன் சேர்ந்து கோலம் போட்டு பழகியிருக்கிறாள் என்ற உண்மை ரிசல்ட் வந்த அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது.

எல்லோரும் அவளை திட்டு திட்டென்று திட்ட இதுதான் சாக்கு என நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவன் போல ஆக்ட் கொடுத்து நாலு சாத்து சாத்திவிட்டேன். எவ்வளவு வாங்கியிருப்பேன் எப்ப கணக்க தீர்த்துக்கறதாம்.

அதன் பின் நான் கல்லூரி முடித்து சென்னைவாசியானேன் அங்கெல்லாம் இப்படி பெரிய கோலங்களை பார்த்ததாக நினைவில் இல்லை.

ஈரோட்டில் தினமலரில் வேலை பார்க்கும்போது கோலப்போட்டி நடத்துவார்கள் அப்போது ஆர்கனைசராக சென்ற ஞாபகம்

“அவள் போடும்
கோல அழகைவிட
அவள் கோலம் போடும்
அழகே அழகு”

என அழகான பெண்கள் கோலம் போடும்போது நினைத்திருக்கிறேன் ஆனால் இப்படி கவிதையாக எழுதி வைத்ததில்லை.

மங்களூர்வாசியான பின் அதுவும் இல்லை. நான் பார்த்த கடைசி கோலம் சன் டிவியில் தேவயானியுடையது

கோலங்கள் கோலங்கள்
அழியாத கோலங்கள்
(டொய்ண்ட்ட டொய்ண்ட்ட டொய்ண் டொய்ண் டட
டொய்ண்ட்ட டொய்ண்ட்ட டொய்ண் டொய்ண் டட)
ஆணென்பதும் பெண் என்பதும்
ஆண்டவன் கோலங்களே

இப்படி ஒரு ஐந்து நிமிசத்துக்கு அந்த பாடல் போகும் தேவயானியும் அதில் நடந்துகொண்டே இருப்பார் தினமும். அன்றைக்கு கிளம்பியிருந்தால் இந்நேரம் மங்களூருக்கே வந்து சேர்ந்திருக்கலாம்.

பாட்டு முடிந்தவுடன் அவசர அவசரமாக சேனலை மாற்றிவிடுவேன்.

இது வரைக்கும் பார்த்த கோலம் இதன் பிறகு கேட்ட கோலம். எப்போதாவது ஊருக்கு செல்லும் போது வேறு வழியில்லாமல் அம்மாவுடன் சேர்ந்து அழுவாச்சி சீரியல்கள் பார்ப்பேன்.

அம்மாவும் சன் டிவியை போட்டுவிட்டு அடுப்படிக்கு போய்விடுவார் நான் சேனல் மாற்றினால் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக வந்து திரும்ப சன் டிவிக்கு மாற்றிவிட்டு திரும்ப அடுப்படிக்கு போய்விடுவார் அப்படி வேறு வழியில்லாமல் பார்த்தது இல்லை இல்லை கேட்டது மலர்கள் என்ற தொடரில் வரும்

அரிசி மாவால “கோலம்” போடு
அரளி பூவால மாலை போடு
மாலை போடு
......
......

அரிசி மாவு கோலத்துக்கும் அரளி பூ மாலைக்கும் என்ன சம்பந்தம் என யோசித்துக்கொண்டே இரண்டு மூன்று நாட்கள் அந்த விளங்காத சீரியலை பார்த்தேன் அதுக்குள் அந்த பெண் “வைஷ்ணவி” சூசைட் செய்து செத்து போய்விட்டது. அடடா நாம ரெண்டு நாள் சீரியல் பார்த்ததுக்கு இவ்வளவு எஃபக்ட்டா என நினைத்துக்கொண்டு அதன் பிறகு எந்த சீரியலும் பார்ப்பதில்லை.

உங்களுக்கு பிடிக்காத சீரியல் சன் , ஜெயா, விஜய்யில் வந்தால் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு போங்கள் (அந்த மூன்று சேனல்தான் இங்கே வருகிறது) அதை பார்த்து நிறுத்தி வைக்கிறேன்.