படிச்சிட்டு திட்டுங்க

நன்றி : செல்வன்

கிபி 40016 வருடம் கோழி முரசு பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரை. எழுதியவர் திரு முத்து கோழி.

"வர வர இந்த CETH (Chickens for ethical treatment of humans) சைவ உணவு அமைப்பினர் செய்யும் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போகின்றன.சோதனை மனிதர்கள் மீது மருத்துவ பரிசோதனை நடத்துவதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர்.போன வாரம் KFH (Kentucky friend humans) உணவு விடுதி முன் அசைவ உணவு பரிமாறப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

கோழிகளை படைத்த கோழிக்கடவுள் 7 அறிவு கொண்ட கோழிகளுக்காகவே மனிதன் உள்ளிட்ட ஆறறிவு படைத்த விலங்கினங்களை உணவுக்காக படைத்திருப்பதாக கோழி வேதம் கூறுகிறது. மேலும் அசைவ உணவு உண்பது கோழிகளின் உடல் அமைப்புக்கு பொருத்தமானது என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மனிதர்களை குத்திக்கிழிக்கவே கோழிகளுக்கு கூரிய அலகை கோழிக்கடவுள் கொடுத்துள்ளார்.கோழிகள் சைவ உணவு அருந்துவது சிறிதும் அவற்றின் இயற்கையமைப்புக்கு பொருத்தமற்றது. இறைச்சிக் கூடங்களில் மனிதர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக சைவ கோழி அமைப்பினர் கூறுவது பொய்.

மனிதர்களின் பற்களை மயக்க மருந்து கொடுக்காமல் தட்டி எடுப்பது உண்மைதான்.20000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களும் இறைச்சிக்கூடங்களில் இப்படித்தான் கோழிகளின் அலகுகளை வெட்டி எடுத்தனர்.மனிதன் தான் மிருகாபிமானம் இல்லாதவன்,கோழிகள் உயர்ந்தவை.கருணை காட்டுங்கள் என சைவ அமைப்பினர் சொல்வது சரியல்ல.மனிதப்பல்லை தட்டி எடுப்பது அவர்களுக்குளே சண்டை வந்து கடித்துக் கொள்ளாமல் இருப்பதற்கே.

பிறந்த மனித ஆண் குட்டிகளை பிறந்தவுடன் மெஷினில் போட்டு கொல்வதை சைவ அமைப்பினர் குறை கூறுகின்றனர்.ஆண் குட்டிகளால் பிரயோஜனம் இல்லை என்பதால் தான் பிறந்தவுடன் கொல்லபடுகின்றன.பெண்களின் இறைச்சிக்கே சுவை அதிகம்.மேலும் 20000 வருடம் முன்பு மனிதன் கூட இப்படித்தான் ஆண் கோழிக்குஞ்சுகளை பிறந்தவுடன் கொன்று கொண்டிருந்தான்.

உயிரோடு மனிதர்களை வெண்ணீரில் போட்டு தோலுரிப்பதாக சொல்வதும் சரியல்ல.எல்லா மனிதரையும் இப்படி செய்வதில்லை.5% மனிதர்கள் தான் இப்படி கொல்லபடுகின்றனர்.இந்த எண்ணிக்கையை குறைக்க முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிக்ஸ் சிக்மா அறிமுகப்படுத்தியவுடன் 15% இருந்து இந்த எண்ணிக்கை 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மனித மாமிசம் புரதச்சத்து மிகுந்த ஒன்றாகும்.விடமின் B12 மனித மாமிசம் மூலமே கோழிகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மனித எலும்பு சூப் குடித்தால் கால்ஷியம் சத்து கிடைக்கும் என்பதும் உண்மை.சைவ உணவு சாப்பிடும் கோழிகள் அசைவ உணவு சாபிடும் கோழிகளை விட வலு குறைந்தே காணப்படும். மேலும் உயிர்க்கொலை கூடாது என சொல்லும் சைவ அமைப்பினர் செடிகொடிகளுக்கும் உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்து பட்டினி கிடந்து சாவார்களா என்பதையும் கேட்க விரும்புகிறேன்.

இது எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் மருந்து கம்பனிகளில் சோதனை மனிதர்களை மருத்துவ சோதனைக்கு பயன்படுத்துவதை சைவ அமைப்பினர் எதிர்த்து அடிக்கடி போராட்டம் நடத்துவதுதான்.மருந்து இல்லாமல் கோழி இனம் என்ன ஆகும்?சோதனை மனிதர்களின் கண்களில் அமிலம் ஊற்றப்படுகிறது,உயிரோடு வயிறு கிழிக்கப்படுகிறது என்றெல்லாம் பார்த்தால் மருத்துவ உலகம் என்னாவது?கோழி இனத்துக்கு வரும் வியாதிகளுக்கு என்ன செய்வது?

ஆக இந்த சைவ அமைப்பினரின் சூழ்ச்சிக்கு அரசு பலியாகி மருத்துவ சோதனைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மிருகாபிமானத்தோடு நடந்து கொள்ளவும் சைவ உணவு கோழிகளை கேட்டு கொள்கிறேன்.

Posted in Labels: |