தேவதாசு-2

இடைவேளைக்கு முன்னாடிப் படம் பார்க்காதவங்க போயி முதல் பாதியப் பார்த்துட்டு வாங்க... இங்க

இதயம் பலகீனமானவங்க தொடர்ந்து படிக்க வேண்டாம்.

ஆங்..இடைவேளைக்கு முன்னாடி, நான் ஒரு விஷயத்த சொல்ல மறந்துட்டேன்….அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, பானுவுக்கு, தேவ் ஒரு காதல் பரிசு கொடுப்பார் --அது ஒரு, ஒரு ரூபாய் நாணயம்….( கொடுக்கும் போதே, “ஆனந்தம்” படம் மாதிரி, இந்த ஒத்த ரூபாய வச்சி ஒரு பாட்டுப் போடுவாங்கன்னு எதிர் பாத்தேன்!நல்ல வேளை பாட்டெல்லாம் எதுவும் இல்ல…

ஆனா அந்த ஒரு ரூபாய வச்சி……அப்புறம் சொல்றேன்….)இடைவேளைக்கப்புறம் பாரதியார் பானுவ , அமெரிக்கா கூட்டிட்டுப் போயிடறார்.அமெரிக்காவுல ஒரு காட்சி:ஒரு ரெஸ்டாரண்ட்ல பானு குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க…அப்போ பாரதியார் , பானுவுக்கு எப்படி தேவதாஸ மறக்க சொல்லி மறைமுகமா சொல்றதுன்னு யோசிக்கிறார்…உடனே பானுகிட்ட இருந்து தேவ் கொடுத்த அந்த ஒத்த ரூபாய எடுத்து, அத பாத்துக்கிட்டே “ பானு! இந்தியாக் காசெல்லாம் அமெரிக்காவுல செல்லாதுமா”ன்னு சொல்லிட்டு அதத் தூக்கிப் போடறார்.

அந்த வசனத்துலேயே எல்லாத்தையும் புரிஞ்சுக்கிற புத்திசாலி பானு, ஓடிப் போய் அந்தக் காச எடுத்துக்கறாங்க.பானுவும் பதிலுக்கு ஒரு வசனம் பேசுறாங்க “அப்பா! நீங்க வேணா அமெரிக்கா வந்த வுடனே இந்தியாவ மறந்திருக்கலாம், நான் மறக்கல” அப்பிடின்னு சொல்றாங்க…அதுக்கு பாரதியார் நேரடியா விஷயத்த சொல்வாரு : “இங்க இருக்கவங்கள்ல ஒரு மாப்பிள்ளைய செலெக்ட் பண்ணு, உனக்கு சீக்கிரமே கல்யாணம்”

கொஞ்சம் யோசிச்சுட்டு பானு சொல்வாங்க : “உங்க இஷ்டம்ப்பா”( என்ன தேவதாஸ காதலிச்சுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்க பானு ஒத்துக்கிட்டாங்களேன்னு அதிர்ச்சியா இருக்கா…கொஞ்சம் பொறுங்க…முடிச்சு(!) அவிழும் )

இப்போ இந்தியாவுல ஒரு காட்சி :ஏமாத்தி, பானுவ அவங்கப்பா அமெரிக்கா கூட்டிட்டுப் போய்ட்டத, நண்பர்கள்ட்ட சொல்லி வருத்தப்படறார் தேவ்.தேவதாஸ உடனே அமெரிக்கா கெளம்ப சொல்லி நண்பர்கள் உசுப்பேத்துறாங்க….நான்….எப்படி….அமெரிக்கா….ப்ச்….அப்பிடின்னு கமல் மாதிரி ரியாக்ஷன் காட்டுறார் தேவ்….

அப்போ அது வரைக்கும் காமெடி பண்ணிக்கிட்டு இருந்த தேவோட நட்புவட்டாரம்….., நட்பப் பத்தி ஒரு மினி லெக்சர் எடுக்கறாங்க….தியேட்டரே ஒரு மயான அமைதியில இருக்கு…எல்லாத்துக்கும் மேல எனக்கு பக்கத்துல உக்காந்திருந்தவர் எங்க நான் பார்த்திடுவனோன்னு எனக்குத் தெரியாம கண்ணத் தொடச்சிக்கிறார்… ( சோகத்துல அழுகறாராமாம் )எனக்கு அழுவதா இல்ல சிரிக்கிறதான்னு தெரியல ….

லெக்சர் முடிஞ்ச வுடனே எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து தேவதாஸ சென்னைக்கு அனுப்பி வைக்கறாங்க…சென்னை வர்ற தேவ், அமெரிக்க தூதரகத்துக்குப் போறார்….அவர் அனாதை, சொந்த வீடு இல்லை அப்பிடி இப்பிடி காரணம் சொல்லி அங்க அவரோட விசா அப்ளிகேஷன ரிஜக்ட் பண்ணிடறாங்க……( ரிஜக்டட் அப்பிடின்னு அந்த அபீஸர் சீல் குத்துறத 4 தடவ திருப்பி திருப்பி காட்டுறாங்க…எங்களுக்கு நெஞ்சுலக் குத்தின மாதிரியே இருந்துச்சு! )

அப்பிடியே இடிஞ்சு போய் நிக்கற தேவ், ஒரு நடை பிணமா, பீச்ல சுத்தறார்…பிண்ணனியில ஒரு சோகப் பாட்டு பாடுது….ரோட்ல நடந்து வரும்போது தேவ் ஒரு கார்ல மோதி விழறார்…கார்ல இருந்து எறங்கி வர்றது யாருன்னு பாத்தா…படம் ஆரம்பிச்சப்போ ஒரு குத்துப் பாட்டுக்கு தேவோட ஆடின மழை ஷ்ரேயா…

தேவோட கதைய முழுசாக் கேட்ட ஷ்ரேயா சோகம்+கோபத்துல கண் செவக்கறாங்க…உடனே செல்லெடுத்து ஒரு மியூசிக் டைரக்டருக்கு போன் போடறாங்க….அவரு டைரக்டருக்கு போன் போடறார்…டைரக்டர் ஷ்ரேயாக்கிட்ட பேசறார்…. ஷ்ரேயா “கண்டிப்பா நீங்க எனக்காக இத பண்ணனும் “ அப்படின்னு சொல்றாங்க…அடுத்த நாள் பாத்தா ஒரு ஷூட்டிங்க்காக ஒரு சினிமா குழு அமெரிக்காப் போகுது… ஒரே ராத்திரியில அந்தப் படத்துக்கு அஸிஸ்டண்ட் டைரக்டராய்ட்டார் நம்ம தேவ்…அஸிஸ்டண்ட் டைரக்டர்ங்கறதால உடனே விசா கெடைச்சுடுது….அந்த சினிமாக் கூட்டத்தோட தேவும் அமெரிக்கா போய்டறார்…( அப்ரூவ்ட் அப்பிடின்னு அந்த அபீஸர் சீல் குத்துறத 10 தடவ திருப்பி திருப்பி காட்டுறாங்க…எங்களுக்கு முதுகுலக் குத்தின மாதிரியே இருந்துச்சு! )

அமெரிக்கா ஏர்போர்ட்ல எறங்குற தேவோட கெட்டப் : அமெரிக்க கொடி ப்ரிண்ட் ஆகியிருக்கிற ஒரு கோட் மாதிரி ஒரு பனியன்…தலைக்கு ஒரு குல்லா….ஏர்போர்ட்ட விட்டு “ஹே …ஹே…”ன்னு கத்திக்கிட்டே ஒரு “ஏ இந்தா..ஏ இந்தா” னு ஒரு ஆட்டத்த போட்டுக்கிட்டு வெளியே வர்றார்….தேவ் கையில ஒரு 2000 டாலரக் குடுத்துட்டு “All the Best” சொல்லிட்டு மறைஞ்சுடறார் அந்த டைரக்டர்...( நீங்க புத்திசாலியா இருந்தீங்கன்னா இவர் தான் இந்த படத்தோட உண்மையான டைரக்டர்னு நான் சொல்லாமலேயே புரிஞ்சுப்பீங்க! )

தேவ், எப்படியோ பாரதியாரோட வீட்ட கண்டுபிடிச்சு அது முன்னாடி நின்னு நோட்டம் விட்டுக்கிட்டு இருப்பார். பாரதியார் வந்து அமெரிக்காவுல ஒரு செனட்டர்…அதனால பாதுகாப்பு அதிகமா இருக்கும்….திடீர்னு தேவ போலீஸ் சுத்தி வளைச்சுடுது….“who r u?”“what r u doing here”அப்பிடின்னு போலீஸ் துப்பாக்கி முனையில அவர மெரட்டுவாங்க….(….தியேட்டரே திக் திக் னு துடிச்சுட்டு இருக்கு…)

அங்க தான் ஹீரோ தன்னோட மூளையப் பயன்படுத்துவார்…தன்னோட Passport, visa எல்லாத்தையும் எடுத்துக் காட்டி தான் ஒரு Assistant Director, location பாக்கிறதுக்காக வந்ததா சொல்லி தப்பிச்சுடுவார்…( தியேட்டரில் விசில் பறக்கிறதுன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணுமா? )

அப்புறம் தேவ் தனியா அமெரிக்காவுல சுத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு பொண்ணு ( கண்டிப்பா அது ஒரு தெலுங்குப் பேசற பொண்ணு! ) ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போறத பாக்குறார்…அதுக்கிட்ட போய் இங்க இருந்து குதிச்சா தப்பிக்க சான்ஸ் இருக்கு, அதோ அந்த பில்டிங் மேல இருந்து குதிச்சீன்னா உடனே சாகலாம், அப்பிடின்னு ஐடியா கொடுப்பார்.

தன்னோட மனச திசை திருப்பதான் சொன்னான்னு, லேட்டா புரிஞ்சிக்கிற அந்த பொண்ணு, தேவ் பின்னாடியே வந்து “நீ போனதுக்கப்புறம் நான் தற்கொலை பண்ணிக்கிட்டா என்னப் பண்ணுவ? “ அப்பிடின்னு கேட்கும்…

“ஒரு தடவ தற்கொலை பண்ணிக்கப் போய் தப்பிச்சவங்க, அதுக்கப்புறம் சாகத் துணிய மாட்டாங்க” அப்பிடினு ஒரு அற்புதமான(!) வசனத்த அசால்ட்டா சொல்லிட்டு கேஷுவலா நடக்க ஆரம்பிச்சுடுவார் நம்ம தேவ்.அதுல இம்ப்ரஸ் ஆகுற அந்தப் பொண்ணு தன்னோட “காதல் தோல்வி சோக”த்த தேவ்கிட்ட கொட்டுது.தேவ் தன்னோட சோகத்த கொட்டுவார்.

அதக் கேட்டுட்டு ஃபீல் ஆகுற அந்த பொண்ணு தேவ் காதலுக்கு தான் உதவி பண்றதா சொல்லி,அவளோட வீட்டுக்கு கூட்டிட்டுப் போகுது…இதுக்கு நடுவுல பானுவுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்திருப்பாங்க….மாப்பிள்ளை குடும்பத்துக் காரங்க எல்லாம் பொண்ணு பாக்குற வைபவத்துக்காக நம்ம பாரதியார் வீட்டுக்கு வருவாங்க….( அமெரிக்கா போனாலும் பொண்ணு பாக்கப் போற பழக்கம் இன்னும் மறக்கல )

( பாரதியார் வீட்ல நீங்க பாக்க வேண்டிய விஷயம் சுவர்ல “புஷ்”சோட போட்டோ மாட்டியிருப்பாங்க…அவர் அங்க அரசியல்வாதி இல்லையா? டைரக்டரோட அறிவப் புரிஞ்சுக்குங்கப்பா!) ( புஷ் கால்ல பாரதியார் விழற மாதிரி ஒரு சீன் கிராபிக்ஸ்ல பண்ணியிருந்தாங்களாம்…எடிட்டிங்ல போயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன் )

“சரி பொண்ண வரச் சொல்லுங்கப்பா”- மாதிரி ஒரு வசனத்த தெலுங்குல ஒரு பெருசு சொன்னவுடனே மாடிப் படிய காட்டுறாங்க….தழையத் தழையப் பொடவையக் கட்டிக்கிட்டு, வெட்கப்பட்டுக்கிட்டே பானு, மாடிப்படியில இருந்து எறங்கி வரும்னு எதிர்பார்த்தா ஒரு கவர்ச்சிப் பாட்டுக்குத் தேவையான காஸ்ட்யூம்ல எறங்கி வந்து நடு வீட்டுல ஒரு குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க….ஆடி முடிச்சுட்டு,“நான் தேவதாஸ தான் கல்யாணம் பண்ணிப்பேன், தேவத் தவிர வேற யாருக்கும் எம் மனசுல எடமில்ல” அப்பிடின்னு வசனம் பேசிட்டு மாடிப்படியேறிப் போய்டுது….

சரி வந்ததுக்கு ஒரு டான்ஸாவது பாத்தமே அப்பிடின்னு ஜொள்ள தொடச்சிட்டு மாப்பிள்ளை வீட்டுக் காரங்களும் கெளம்பி போய்டுவாங்க….

கோபம் தலைக்கேறின நம்ம பாரதியார், நேரா மாடிக்குப் போறார்…எதிர்பார்த்த மாதிரியே பானுவ ஒரு ரூமுக்குள்ள தள்ளிப் பூட்டி வச்சிடறார்.நம்ம மாமி ( அதாம்ப்பா தேவதாஸையும், பானுமதியையும் சேத்து வைக்கிறதுக்கு உதவி பண்றேன்னு சொன்ன பொண்ணு ) ,தேவ்க்கு ஒரு புது செல்லு, ஒரு புது காரு…எல்லாம் வாங்கிக் கொடுக்குது….எப்படி பானு வீட்டுக்குள்ள நுழையறதுன்னு ரெண்டு பேரும் யோசிக்கறாங்க…

ஒரு சூப்பர் ஐடியா ( பாரதியார பேட்டி எடுக்கிற மாதிரி அவர் வீட்டுக்கு போறது ) கண்டு பிடிச்சு அவர் வீட்டுக்குப் போறாங்க…அங்க இருக்க பத்திரிக்கைக் காரங்க கூட்டத்துக்கு நடுவுல எப்படியோ பூந்து வீட்டுக்குள்ள போய்டுவார், தேவ்…அங்க பானு இருக்கிற ரூமக் கண்டுபிடிச்சு…ஜன்னல் வழியா பானுவக் கூப்பிட்டு எதோ பேச ஆரம்பிப்பார்…அதுக்குள்ள பாரதியார் உள்ள வந்திடுவார்….

தேவ், ஒளிஞ்சு ஒளிஞ்சு ஒரு பேப்பர்ல எதையோ எழுதி அந்த வீட்டு நாய்(!)கிட்ட கொடுத்திட்டு எஸ்கேப் ஆகிடுவார்…

நாய் வாயில ஒரு பேப்பர் இருக்கிறத பாத்துட்டு பாரதியார் அத எடுக்கப் போக, அதுக்குள்ள வேலக்காரர் அத எடுத்து படிக்க ஆரம்பிச்சுடுவார்…( பானு, பாரதியார், பானுவோடப் பாட்டி, அந்த நாய், எல்லார் முகத்தையும் க்ளோஸ் அப் ல காட்டுறாங்க…ஒரு விதப் பதட்டமும், பரிதவிப்பும் தெரியுது எல்லார் முகத்திலயும், இப்ப உங்க முகத்துல கூடத் தான் J)“I MISS U” னு அதுல எழுதி இருக்கு ….

எதையோ சொல்லி பானுவோட பாட்டி பாரதியார சமாளிச்சுடுவாங்க…ஆனா அத கவனிக்கிற பானு, பேப்பர், பென்ஸில் எடுத்து, அத டீக்கோட் பண்ணி, தகவலப் புரிஞ்சுக்குவாங்க……( அது என்ன தகவல்னு கதைய மேலப் படிக்காம சரியாக் கண்டுபிடிச்சு பின்னூட்டமாக இடுபவருக்கு இந்தப் படத்தோட சிடி பரிசாக(!) உங்கள் செலவில் அனுப்பி வைக்கப்படும்! )

அடுத்த நாள் பானு, தேவ்க்கு ஃபோன் பண்ணி பேசுறாங்க…ரொம்ப நாள் கழிச்சு காதலர்கள் பேசிக்கிறத வெறும் வசனத்துல எப்படிக் காட்டறதுனு யோசிச்ச டைரக்டர், அவங்கள அப்படியே போன்லேயே ஒரு பாட்டு பாட வச்சிடறார்….

ஃபோன்ல பாடிக்கிட்டே அவங்களும் பீச், பார்க் எல்லாம் போய்ட்டு வந்திடறாங்க…ஒரு தடவ, பாரதியார் வீட்டு மாடியில இருந்து கீழ லிஃப்ட்ல போய்க்கிட்டு இருப்பார்…அதப் பாக்குற பானு, ரூம்ல இருக்க பல்ப எடுத்துட்டு, பல்புக்கு பின்னாடி தேவ் தந்த ஒரு ரூபாய வச்சி திரும்பவும் பல்ப மாட்டிட்டு, சுவிட்ச்சப் போட்டு, ப்யூஸ் போக வச்சிடுவாங்க…கரண்ட் போனதால லிஃப்ட் பாதியிலேயே நின்னுடும்…

லிஃப்டுக்குள்ள மாட்டுன பாரதியார், ஏதோ சுனாமியே வந்துட்ட மாதிரி கத்துவார், கதறுவார், கொஞ்ச நேரத்துல செக்யூரிட்டி ஆளுங்க வந்து ப்யூஸ் சரி பண்ணி, லிஃப்ட கீழ எறக்குவாங்க…லிஃப்டத் தொறந்து தொபுக்கடீர்னு வெளில வந்து விழுவார் – பாரதியார்…

டிரெஸ் எல்லாம் நனஞ்சு போயிருக்கும்.. ( பயத்துல வியர்த்து கொட்டிடுச்சி வேற ஒன்னும் இல்ல! )சந்திரமுகி மாதிரி லக..லக..லக…ன்னு சிரிச்சுட்டு “இந்தியாக் காசு அமெரிக்காவுல செல்லாதுன்னு சொன்னீங்களே – இப்ப எப்படி உங்கள பயமுறுத்துச்சி பாத்தீங்களா” அப்பிடின்னு பானு, தன்னோட அப்பாவப் பாத்துக் கேட்பாங்க….

தியேட்டர்ல ஒரே கைத்தட்டல் தான் போங்க!!பானுவ எப்படி வீட்டுச்சிறையில இருந்து மீட்கறதுன்னு தேவும், மாமியும் தீவிரமா யோசிச்சு ஒரு ஐடியா பண்ணி பானுவுக்கு போன் பண்ணி சொல்றாங்க….அடுத்த நாள் பானுவ கோயிலுக்கு கூட்டிட்டுப் போகறதுக்கு பாரதியார்ட்ட பர்மிஷன் வாங்கிடறாங்க பானுவோட பாட்டி….

கார்ல பானு, பானுவோட பாட்டி, பாரதியார், வேலைக்காரர் எல்லாரும் கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கும்போது வழியில ஒரு பஞ்சாபிக் கூட்டம் “பல்லே பல்லே”னு டான்ஸ் ஆடிக்கிட்டு வருது….

கார்ல இருந்து எறங்கி எல்லாரும் வேடிக்கைப் பாக்குறாங்க…பஞ்சாபிப் பொண்ணு ஒன்னு ஒரு பஞ்சாபிக் குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது…. அத , பாரதியார், வாயப் பொளந்து வேடிக்கப் பாத்துட்டு இருக்கிற கேப்ல, தேவும், மாமியும், வந்து பானுவ கடத்திட்டுப் போய்டுவாங்க….டென்ஷன் ஆகிடற நம்ம பாரதியார் போலீஸ், அடியாள் எல்லாரையும் அனுப்பி பானுவ தேடச் சொல்றார்..

பானுவையும், தேவதாஸையும், கார்ல கூட்டிட்டுப் போற மாமி, ஒரு தனித் தீவுக்கு வந்து சேர்றாங்க….“இந்தத் தீவுக்கு யாரும் வர முடியாது, உங்கள யாரும் கண்டுபிடிக்க முடியாது, எஞ்சாய்”- அப்பிடின்னு சொல்லிட்டு மாமி எஸ்கேப் ஆகிடறாங்க….பானுவப் பாத்து தேவ் கேட்பார் : “ நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா” அப்பிடின்னு…சரி ஏதோ கண்ணாமூச்சி, நொண்டி இது மாதிரி ஏதோ விளையாடப் போறாங்கன்னுப் பாத்தா அது “செல்லமே” படத்துல வர்ற மாதிரி ஒரு வெவகாரமான வெளையாட்டு…

( என்ன விளையாட்டுன்னு கேட்கிறீங்களா? நான் மட்டும் 30 ரூபா குடுத்துப் பார்ப்பேன்…நீங்க ஓசியிலயே கேட்டுக்கலாம்னு பாக்குறீங்களா? அஸ்கு…புஸ்கு….அது மட்டும் முடியாது! )விளையாட்டு முடிஞ்சவுடனே பாட்டு ஆரம்பிக்குது… ( பின்ன என்னப்பா தனித்தீவு கெடைச்சதுக்கப்புறமும் ஒரு டூயட் பாடலைன்னா அவங்கல்லாம் என்ன காதலர்கள்? )

அவங்க அப்பிடியே இந்தியாவுக்கு தப்பிச்சுப் போயிட்டா படம் சப்புனு முடிஞ்சுடும் இல்லையா? அதனால பானுவக் கொண்டுவந்து திரும்பவும் பாரதியார் வீட்லயே விட்டுட்டு போனஸா ஒரு சவாலும் விட்டுட்டுப் போறார்…நம்ம ஹீரோ!சவால் என்னன்னா :“ நீங்க பானுவ, எங்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி, நானும் உங்க முன்னாடியே அவளக் கடத்திட்டுப் போய் 24 மணி நேரத்துக்குள்ள அமெரிக்காவ விட்டேப் போயிடுவோம்….உங்களால முடிஞ்சா தடுத்துக்குங்க…”

இதக் கேட்டு முதல் முறையா பாரதியார் ( ரொம்ப நேரமா நானும் பாரதியார்னே சொல்லிட்டு இருக்கேன்! மன்னிச்சுக்குங்க நம்ம கதைல இனிமே அவர் – யூ. எஸ். செனட்டர் ) முகத்துல ஒரு கவலை ரேகை படியுது….படம் இப்ப சூடு பிடிச்சுட்டுதா தியேட்டர்ல ஒரு பரபரப்பு பத்திக்குது….எனக்குப் பக்கத்து சீட்காரர் தம்மெடுத்துப் பத்தவைக்கிறார்…

சொன்ன மாதிரியே பானுவ வூடு பூந்து கடத்திடறார் தேவ்…சோஃபா பின்னாடி, கதவு பின்னாடி ஒளிஞ்சு ஒளிஞ்சு, யூ. எஸ் போலீஸ் காதுல ( நம்ம காதுலையும் தான்! ) ஒரு ரெண்டு முழம் பூவ சுத்திட்டு பானுவக் கூட்டிட்டுப் போயிடறார்….கோபப்படற செனட்டர், போலீஸ்கிட்ட கத்துறார்…எப்படியாவது பானுவ 24 மணி நேரத்துல மீட்டுடனும்னு கட்டளை போடறார்…

போலீஸ் ஒரு பத்து ஹெலிகாப்டர எடுத்துக்கிட்டு அமெரிக்காவையே அலசி எடுக்கிறாங்க…செனட்டரும் தன்னோட பங்குக்கு ஒரு கார எடுத்துக்கிட்டு தெரு தெருவா சுத்துறார்….

காருக்குள்ள செனட்டர க்ளோஸ்-அப் ல காட்டுற கேமரா, அப்பிடியே மெதுவா வெளிய வந்து மேலப் போயி, கார டாப் ஆங்க்ள்-ல காட்டுது….கார் பின்னாடியே ஒரு அல்ட்ரா மாடர்ன் பஸ் ( ஸ்வதேஷ் படத்துல ஷாருக்கான் வருவார்ல – அது மாதிரி அட்டாச்டு பாத்ரூம், பெட்ரூம், டி.வி., எல்லாம் இருக்கிற ஒரு மினி வீடு மாதிரியான பஸ்) போய்க்கிட்டு இருக்குது….

இப்போ கேமரா அப்பிடியே மெதுவா கீழ எறங்கி, அந்த பஸ்சுக்குள்ள போகுது…..அங்க….ஹீரோ உக்காந்து சிப்ஸ் சாப்பிட்டுக்கிட்டு F-Tv பாத்துக்கிட்டு இருக்கார்….பஸ்சுக்குள்ளேயே இன்னொரு ரூம்ல இருந்து வர்ற பானு… இதப் பாத்துட்டு கடுப்பாயிடறாங்க….தேவ் ,” இல்ல பானு, அந்த ட்ரெஸ்ல ரொம்ப கவர்ச்சியா இருக்காங்க இல்ல?” அப்ப்டின்னு அசடு வழியறார்.எங்கடா இவன் நம்மள விட்டுட்டு எதாவது அமெரிக்காப் பொண்ண செட்டப் பண்ணிடுவானோன்னு பயந்த, பானு :“இந்தியாவோட புடவைல இத விட கவர்ச்சி அதிகம்” அப்பிடின்னு சொல்லிட்டு உள்ளப் போய்ட்டு கொஞ்ச நேரத்துல வெளிய வர்றாங்க…ஜன்னல், பால்கனி, போர்ட்டிகோ எல்லாம் வச்ச ஒரு ஜாக்கெட் போட்டுக்கிட்டு (பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துடாதீங்க !!!) ஒரு புடவைய சுத்திக்கிட்டு பஸ்சுக்குள்ள ஒரு “கேட் வாக்” நடக்கறாங்க…இது மாதிரி ஒரு நாலஞ்சு புடவைல மாறி மாறி நடந்து வந்து ஹீரோவத் தெணறடிக்கிறாங்க……….

நாங்க தெலுங்கு படத்துக்கு தான் வந்திருக்கோமா இல்ல மலையாள படத்துக்கு வந்திட்டோமான்னு ஒரு நிமிஷம் சந்தேகம் வந்திடுது….பானு மொத புடவைல வரும்போது சோஃபா மேல உக்காந்திருந்த தேவ் கடைசி புடவைல வரும்போது தரைல சரிஞ்சு கெடக்கறார்…உள்ள கேட் வாக் நடக்கிற அதே சமயத்துல வெளிய நம்ம செனட்டர் பாவம் கார்லயே அமெரிக்காவ குறுக்கும் நெடுக்கும் அளந்துக்கிட்டு இருக்கார்….

திடீர்னு செனட்டருக்கு ஒரு ஞாபகம் வருது….வீட்ல நாய் வாயில இருந்து ஒரு லெட்டர்ல “I miss you “னு வேலக் காரன் படிக்கும்போது, பானு பூடகமா சிரிக்கிறத நெனச்சிப் பாக்குறார்…அதுல ஏதோ விஷயம் இருக்குன்னு திரும்பவும் வீட்டுக்குப் போறார்.. பானு பெட்ரூம்லத் தேடி ஒரு பேப்பர எடுக்கிறார்…அதுலI – 9 m-13 i-9 s-19 s-19 u-219139191921 னு ஒரு ஃபோன் நம்பர் எழுதியிருக்கு…அந்த ஃபோன் நம்பர நெட்ல போட்டு தேடி, மாமியோட அட்ரெஸ கண்டுபிடிச்சிடறார்…

மாமி வீட்டுக்குப் போயி, மாமிய மெரட்டி, அவங்க மூலமா, பானுவும் தேவும் போய்க்கிட்டு இருக்கிற பஸ் நம்பர வாங்கிடறார், செனட்டர்….அடியாளுங்களுக்கு ஃபோனப் போட்டு பஸ் நம்பர சொல்லி மடக்கிப் பிடிக்க சொல்றார்…அதே சமயம் பானுவும் தேவும் அந்த பஸ்ல இருந்து எறங்கி வேற ஒரு காருக்கு மாறப் போறாங்க…

நம்ம பக்கத்து சீட்டுக்காரர் முகத்துல நிம்மதி தெரியுது….விடுவாரா டைரக்டர்?பஸ்ல எதையோ மறந்து வச்சிட்டதா சொல்லி திரும்ப எடுக்கப் போறாங்க பானு…அதுக்குள்ள அவங்கள ரவுண்டு கட்டிடறாங்க…நம்ம அடியாட்கள்!( ஆமா! நான்- அடியாட்கள், அடியாட்கள் னு சொல்றனே அமெரிக்காவுல அடியாட்கள் எப்படி இருப்பாங்கன்னு யாரும் கேட்கவேயில்லையே? அடியாட்கள் எல்லாரும் நீக்ரோ )பானுவையும், தேவையும் தனித் தனியா இழுத்துட்டுப் போயிடறாங்க…ஒரு இருட்டான எடத்துல, ஒரு முரட்டு நீக்ரோகிட்ட, தேவதாஸ தனியா விட்டுடறாங்க…அந்த நீக்ரோவும், தேவதாஸ கட்டி வச்சி, சரமாரியா அடிச்சுத் தாக்கிடுவார்….

திடீர்னு கட்ட எல்லாம் பிரிச்சிக்கிட்டு திமிறி வர்ற தேவதாஸ் பக்கத்துல இருந்த ஒரு இரும்பு ராட கையில எடுக்கிறார்…சரி நீக்ரோ தொலஞ்சார்னு பாத்தா…அந்த இரும்பு ராடால தன்னோட மண்டையிலேயே, நச்சு, நச்சு, நச்சு, நச்சு, நச்சுனு அடிச்சிக்கிறார் தேவ்……….

என்னடா ஒரு லூசுப்பயகிட்ட நம்மள தனியாவிட்டுட்டுப் போயிட்டாங்களேன்னு, பயந்து போற நீக்ரோ, பானுவ எங்க தூக்கிட்டு போயிருப்பாங்கன்னு சொல்லிடறார்…அந்த எடத்துக்கு கெளம்பிப் போறார் தேவ்….

(கொட்டாவியெல்லாம் அப்புறம் விட்டுக்கலாம் கதையக் கேளுங்க…)ஒரு பெரிய சண்டையெல்லாம் நடக்குது, துரத்தல் சீனெல்லாம் முடிஞ்சு….கடைசியா…தேவ்க்கு ரைட்ல ஒரு பைக் இருக்கு…லெஃப்ட்ல பானு நின்னுட்டு இருக்காங்க…எதிர்ல ஒரு 20 பேர் தேவ நோக்கி ஓடி வர்றாங்க…வண்டிய ஸ்டார்ட் பண்ணி பானுவ உக்கார வச்சி எஸ்கேப் ஆயிடுவான்னு பாத்தா…தேவ் மட்டும் தெறிச்சு ஓட ஆரம்பிச்சுடுவான்…..அவனத் தொரத்திக்கிட்டே அடியாட்களும் போறாங்க…

பானுவும் என்னோட பக்கத்து சீட் காரரும் பேந்த பேந்த முழிக்கிறாங்க…அப்போ ஓடிக்கிட்டு இருக்க தேவ் சரக்குனு ஒரு U turn அடிச்சு மறுபடியும் வந்து வண்டிய ஸ்டார்ட் பண்ணி பானுவ உக்கார வச்சி தப்பிச்சு போயிடுவான்………

ஏர்போர்ட்ட நெருங்கும்போதே செனட்டர் கிட்ட சொன்ன 24 மணி நேரம் தாண்டி ஒரு நிமிஷம் ஆயிடும்…அடுத்த காட்சி..செனட்டர் வீடு….

பானுவ கொண்டு வந்து அவங்க வீட்டுலயே வீட்டுட்டு செனட்டர பாத்து தேவ் இந்த வசனத்த பேசுவார் :“நீங்க இந்தியாவுல இருந்து பானுவ ஏமாத்தி இங்க அமெரிக்காவுக்கு கூட்டிட்டு வந்தீங்க அது உங்க கேரக்டர்!நான் சவால்ல சொன்ன மாதிரி 24 மணி நேரத்துக்குள்ள பானுவ கூட்டிட்டுப் போக முடியல…ஆனா சவால்ல தோத்துட்டு உங்கள ஏமாத்தி கூட்டிட்டுப் போக நான் விரும்பல…அதனால தான் பானுவ இங்க விட்டுட்டுப் போக வந்தேன்….இது தான் இந்த தேவோட கேரக்டர்”அப்பிடின்னு சொல்லிட்டு பானுவ அங்கேயே விட்டுட்டு அவர் மட்டும் தனியா ஏர்போர்ட் வந்துடுவார்….

சரி நம்மூர்ல ரெயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸ் சீன் காட்டுற மாதிரி தெலுங்குல கொஞ்சம் ரிச்சா, ஏர்போர்ட்ல காட்டுவாங்க போல இருக்குன்னு நெனச்சா….தேவ் பாட்டுக்கு ஃப்ளைட்ல ஏறிடுவான்..ஃப்ளைட்டும் கெளம்பிடும்…..இப்போ ஃப்ளைட்டுக்குள்ள காட்டுறாங்க…..

தேவ் அப்படியே நினவுகள்ல மூழ்கி சோகமா உக்காந்து இருப்பார்….அப்போ Air Hostess வந்து excuse me sir…chocolates please … அப்பிடின்னு சொல்லி சாக்லேட்ட நீட்டுவாங்க…ஒரு சாக்லேட்ட எடுத்து, கவர பிரிப்பார்…. கவருக்குள்ள எழுதி இருக்கும் --“we miss you” அப்பிடின்னு ….பின்னாடி திரும்பிப் பாத்தா பானுவும், செனட்டரும் “ஈ”ன்னு இளிச்சுட்டு நிப்பாங்க….

“ஏ தெலுசா தெலுசா பிரேமம் தெலுசா…” பாட்டு திரும்பவும் ஒலிக்குது…………..

நீங்க கொஞ்சம் இதயம் வீக்கானவர்னா இந்த படத்தோட சில ஸ்டில்ச மட்டும் இங்க போயிப் பாருங்க :லேசான மனசுக் காரங்களுக்கு

இந்த படத்தோட சில காட்சிகளையாவது பாக்கனும்னு உங்களுக்கு மனசுல ஆசையும், தெம்பும் இருந்தா இங்கப் போயி பாருங்க :கொஞ்சம் தெம்புள்ளவங்களுக்கு

இவ்வளவுக்கப்புறமும், இல்ல ! நான் அந்தப் படத்தையே முழுசாப் பாக்கனும்னு அடம்புடிச்சீங்கன்னா…நீங்க ஆயுள் காப்பீடு எடுத்ததுக்கு ஒரு அத்தாட்சிய எனக்கு மின்மடலா அனுப்பி வையுங்க…அந்த படத்தோட DVD- ய இலவசமா நானே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்…

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Posted in |