'?' கேள்விக்குறி.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எல்லா வகுப்பினரும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உடையது இந்தியா. நம் இந்திய தேசம் பல சிக்கல்கலான கட்டமைப்பை கொண்டுள்ள தேசம். அனேகமாக இந்த நிலைமை எல்லா நாட்டிலும் இருக்கும்.

ஏற்கனவே தொழில்நுட்ப வளர்ச்சி காரணமான உயர் சம்பள வர்க்கத்தினர் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணம் இருப்பவரிடம் மேலும் மேலும் பணம் சேர்வது, பணம் இல்லாதோர் மேலும் நலிவது போன்ற சமச்சீரற்ற பொருளாதார நிலமை நிலவிவருகிறது.
விவசாயம், விவசாயிகள் நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது. இன்றளவில் விவசாயம் என்பது லாபம் இல்லாத தொழில் என பலரால் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயி தற்கொலை என்பதான செய்தி தினசரிகளில் தினம் வருவது வாடிக்கையாகிவிட்டது.

விவசாயவேலைக்கு செல்வதைவிட கட்டிடம் கட்டும் தொழிலில் வருமானம் அதிகம் இருப்பதால் பெரும்பாலான தினகூலி ஊழியர்கள் கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்றுவிடுவதால் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. தினக்கூலி ஊழியர்கள் கட்டிடம் கட்டசெல்வதையும் தவறென கூற இயலாது அவர்கள் வாழ்க்கையை நடத்த எங்கு பணம் அதிகம் கிடைக்கிறதோ அங்கு செல்கிறார்கள்.

ஒருபுறம் இவ்வாறான தேய்வுபாதையில் போய்கொண்டிருக்க நகரங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருவதும் கண்கூடான உண்மை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பிருந்த சென்னையை இப்போது நினைத்துக்கூட பார்க்க இயலாது. பல்லாவரம், தாம்பரத்தை சென்னையிலிருந்து வெகுதூரமாக கருதிய காலம் மாறி திருவள்ளூர் , செங்கல்பட்டு, மறைமலைநகர் எல்லாம் சென்னை என்பது தற்போதைய நிலைமை.
சிறு சிறு அங்காடிகளில் பொருட்களையும் , காய்கறிகளையும் வாங்கி வந்த நாம் இன்று ஷாப்பிங் மால்கள் எனப்படும் பெரும் வணிக அங்காடிகளில் பொருட்களையும் , காய்கறிகளையும் வாங்கிக்கொண்டிருக்கிறோம், மிக வேகமாக விண்டோ ஷாப்பிங் எனும் கலாச்சாரத்திற்கு மாறி வருகிறோம்.சிறுவியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்பவர்கள் என கோடிக்கணக்கானவர்களின் வாழ்வே இதனால் கேள்விக்குறியாக மாறிவிட்டது. படித்தவர்களுக்கே வேலை இல்லை எனும்


நிலைமை இருக்கும் பொழுது திடீர் என இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் நிலைமை பரிதாபம்தான். காய்கறிகள் விற்பனை செய்வது

போன்றவற்றிற்கு இத்தகைய பெரும் ‘வணிக வளாகங்களை’ அனுமதித்த அரசு சிறுவியாபாரிகள், தெருவோர, தள்ளுவண்டியில் விற்று பிழைப்போருக்கு எந்தவிதமான மாற்று ஏற்பாட்டையாவது செய்துள்ளதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி.