பெண்களும் நிதி நிர்வாகமும்

சில நாட்கள் முன்பு விஜய் டிவியில் "நீயா நானா" எனும் நிகழ்சி பார்தேன் அதன் கரு -மனைவி உறவு எப்படிப்பட்டது பெண்கள் பணம் கையாளும் நிர்வாக சுதந்திரத்துடன் இருக்கிறார்களா என்று.

கணவன் மனைவி உறவென்பது தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவைப்போல அல்லது அதையும்விட சிறந்தது என பலரும் சொன்னார்கள். தாய் - மகன் என்பது ரத்த சம்பந்த உறவு. மனைவி என்பவள் அப்படி அல்ல இன்னோர் வீட்டில் வளர்ந்து திருமணம் எனும் பந்தத்தின் மூலம் நம் வீட்டிற்க்கு வந்து எல்லாமாக இருக்கிறாள் அவள் தாயினும் மேலானவள். என பலதரப்பட்ட விளக்கங்களை ஆண்கள் சொன்னார்கள்.

பெண்களும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் எல்லாமே அவர்தான், மறுபாதி, அவர் இல்லாமல் எதுவும் இல்லை என்றும் சொன்னார்கள்.

இன்றளவில் வேலைக்கு செல்லாத நடுத்தர குடும்ப பெண்களே இல்லை என சொல்லும் அளவுக்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றம் மிக சிறந்த மாற்றமாகும். சில பெண்கள் வேலைக்கு செல்லவேண்டியதில்லை என்ற பொருளாதார தன்னிறைவுடைய பின்னனியில் இருந்தாலும் லட்சியத்திற்காக வேலைக்கு செல்கின்றனர் இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம் ஆனால் பல இடங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்தான் ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் சுமாரான வாழ்க்கையை நடத்த முடியும் என்ற கட்டுக்கடங்காத அதி உயர் விலைவாசி சூழலும் நிலவி வருகிறது.

திருமணமான பெண்களிடம் நிதியை அதாவது பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு / சுதந்திரம் எந்த அளவு வழங்கப்பட்டிருக்கிறது? என விவாதம் தொடங்கியதும் மேற்சொன்ன எல்லாமே வெறும் வார்த்தை ஜாலமே என புரிந்து போனது.

திருமணம் வரை பெற்றோர் கவனிப்பில் இருந்து வந்தாலும் அப்போது தங்கள் தேவைகளுக்கான செலவுகளையும் சிற்சில ஆடம்பர செலவுகளையும் செய்யும் சுதந்திரத்துடன் பெண்கள் இருந்து வந்திருக்கிறார்கள்.

விவாதத்தில் கலந்து கொண்ட பெரும்பாலோனோர் கணவன் மனைவி இருவரும் பணியில் இருப்பவர்கள் என்பதுதான் இன்னும் வேதனை. இதில் உச்சமாக ஒருவரின் துணைவியார் சொல்கிறார் எங்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது என் கணவரின் சம்பளம் எவ்வளவு என்றே எனக்கு தெரியாது என :(. இதில் தவறு எங்கிருக்கிறது ஆணாதிக்கமா? பெண்கள் பொறுப்பை எடுத்துக்கொள்ள தயங்குகிறார்களா? மறுக்கப்படுகிறார்களா? நிதி நிர்வகிக்கும் திறன் அற்றவர்களா?

பெண் என்பவள் நிதி நிர்வகிக்கும் திறனற்றவளாக இருக்கமுடியாது, ஒரு சிலர் இருக்கலாம் ஆண்களிலும் இருப்பார்கள் அவர்களை பற்றி பேசவேண்டாம் பெரும்பாலோனோர் பற்றி பேசுவோம். ஒரு நிறுவனத்தில் ப்ரொக்ராமரார், அனலிஸ்டாக, ப்ராஜக்ட் மேனேஜராக நிர்வாகியாக இருக்கும் பெண்கள் எப்படி நிதி நிர்வாகம் செய்ய திறனற்றவர்களாக இருக்க முடியும்?

பெண்கள் மேல் சொல்லப்படும் குற்றச்சாட்டு என்ன? ஆ ஊ என்றால் புடவை வாங்கிவிடுகிறார்கள், நகை வாங்கிவிடுகீறார்கள், செலவுக்கு கணக்கு வைத்துக்கொள்வதில்லை என்பவைகள். ஆண்களின் ஆடம்பர அனாவசிய செலவுகளான புகைபிடித்தல், பார்ட்டிக்கு போவது, ட்ரிங்க்ஸ் போன்ற செலவுகளுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை.

கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால், மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது.

இது பெரும்பாலான வேலைக்கு செல்லும் / செல்லாத திருமணமான நடுத்தர குடும்ப பெண்களின் நிலைமையை மனதில் இருத்தி எழுதப்பட்டது. விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு.

நல்ல மாற்றங்கள் அவசியம்.
மாறும் நம்புவோம்.