மருத்துவ காப்பீடு

சென்னையில் 97 – 98 ம் ஆண்டுகளில் பணிபுரிந்தவர்கள் இருக்கிறீர்களா, அப்போதைய சராசரி மாத வருமானம் எவ்வளவு?. க்ளெரிகல் வேலைக்கு பி.காம், பி.எஸ்சி படித்தவர்களின் மாத சம்பளம் 1500லிருந்து அதிக பட்சம் 3000 ரூபாய்கள்தான்.

போன மாதம் என் நண்பர் ஒருவர் உடல் நலமில்லாமல் சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு "ஒரு நாள்" அறை வாடகை இரண்டாயிரத்து நூறு ரூபாய்கள் இதைத்தவிர மருத்துவர், மருத்துவ, மருந்து செலவுகள் தனி. இந்த வேகத்தில் பணவீக்கம்/விலை உயர்வு அதிகரித்து சென்றால் இன்னும் பத்து வருடம் கழித்து மருத்துவமனை செல்லும் போது அறை வாடகை அப்போது நாள் ஒன்றுக்கு பத்தாயிரம், பதினைந்தாயிரம் இருந்தால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. பதினோரு நாள் அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பும்பொழுது வந்த பில் அறுபத்தி நான்காயிரம் ரூபாய்கள்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பிறகும் வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள் அதற்கு ஆகும் மாத செலவு பணிரெண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை. இன்றைக்கு நாட்டில் பெட்ரோல், பால், மளிகை , வாடகை என எல்லா துறைகளிலும் விலைவாசி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அதிகரித்து வருகிறது. வாழ்க்கையை ஓட்டுவதே மிக சிரமமாக மாறி சேமிப்பது மிக கடினம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்றைய வேகமான உலகில் பணம் ஈட்டும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நம் ஆரோக்கியம் பற்றி எந்த அளவு அக்கரை கொண்டுள்ளோம் என்பது அவரவர்க்கு நன்கு தெரியும். இது போதாதென வாகன நெருக்கடி நெரிசலால் மாசுபட்ட காற்று, சுத்தமில்லாத குடிநீர், உணவுப்பொருட்களில் கலப்படம் , ஆரோக்யமற்ற பணி சூழல் அதனால் விளையும் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்), துரித உணவுகள் எல்லாம் நம் ஆரோக்யத்துடன் விளையாடி வருகின்றன.


அரசு மருத்துவமனைகளுக்கு செல்லலாம் எனில் பெரும்பாலான நூற்றுக்கு 99 சதவிகித அரசு மருத்துவமனைகள் போதிய வசதிகள், மருத்துவர்கள் இல்லாமல் சுகாதாரமில்லாமல் அங்கு செல்வதால் வேறேதும் நோய் வந்துவிடுமோ என அஞ்சும் அளவிலேயே உள்ளது. (டாக்டர் புருனே மன்னிக்க)

சாதாரண நடுத்தர மக்கள் பெரிய மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை பெறுவது என்பது விண்ணை முட்டும் கட்டணங்களால் இயலாத ஒன்றாகவே உள்ளது. சாதாரண மக்கள் பெரிய தரமான மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவே முடியாதா?

முடியும்.

மருத்துவ காப்பீடு இருந்தால். முப்பது வயதுக்கு குறைந்த ஒருவருக்கு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய்களுக்கு சிகிச்சை பெற வருடத்திற்கான ப்ரீமியம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்களுக்குள் என்ற மிக சிறிய தொகையாகும். சிறிய வயதிலேயே இந்த பாலிசிகளை எடுக்கும்போது மருத்துவ சோதனைகள் பெரும்பாலும் இருக்காது. வயது அதிகரிக்க அதிகரிக்க கட்ட வேண்டிய தொகையும் அதிகரிக்கும், மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தி பாலிசியை வழங்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களும் பல்வேறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த சேவையை வழங்கி வருகின்றனர். சில நிறுவனங்களில் ஏற்கனவே உடலில் இருக்கும் நோய்களுக்கு இந்த திட்டத்தில் க்ளைம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள் ஆனால் சில வருடங்கள் கழித்து அவைகளுக்கும் கிடைக்கலாம் உதாரணத்திற்கு ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் மெடிக்ளைம்-ல் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஏற்கனவே உள்ள நோய்களுக்கும் சிகிச்சைக்கு பணம் தரப்படுகிறது. பாலிசி எடுக்கும்போது இவற்றை நன்கு படித்து பின்பு எடுக்கவும்.

சில மேலை நாடுகளில் மருத்துவ காப்பீடு கட்டாயம் என்கிற நிலை உள்ளது இந்தியாவில் அவ்வாறு ஏதுமில்லை. காப்பீடு இல்லாமல் இருபது , முப்பதாயிரம் பெருமானமுள்ள இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது , சில லட்சங்கள் பெருமானமுள்ள நான்கு சக்கர வாகனம் ஓட்ட முடியாது ஆனால் விலைமதிப்பற்ற மனிதன் உயிருக்கோ, மருத்துவத்திற்கோ காப்பீடு இல்லாமல் இருக்க முடியும் என்பது வேதனை.

சில பயனுள்ள இணைப்புகள்
நியூ இந்தியா இன்சூரன்ஸ் தனிநபர் மெடிக்ளைம்
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் மெடிக்ளைம்
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்