'?' ரியல் எஸ்டேட்

விண்ணை முட்டும் விலைகள் வீடுவாங்குவது என்பது இனி நடுத்தர உயர் நடுத்தர வர்க்க மக்களுக்கு கனவாகவே போகுமோ என பயப்பட வைக்கிறது இந்திய ரியல் எஸ்டேட் விலை உயர்வு. இதற்கு தமிழ்நாடு கேரளா கர்னாநாடகா என எந்த பேதமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் இப்படி உயர்ந்திருக்கிறது. சென்னை போன்ற மெட்ரோக்கள் என்றில்லாமல் கோவை ,திருச்சி ,மதுரை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலைமை.




இதற்கு மிகமுக்கிய காரணம் இதில் புழங்கும் கருப்புபணம் . கருப்பு பணம் என்றால் என்ன? அரசிற்கு வருமானவரி கட்டாத எந்த ஒரு பணமும் கருப்புபணம்தான். எங்கெங்கு 'பில்' இல்லாத விற்பனை / சேவை நடைபெறுகிறதோ அங்குதான் கருப்பு பணத்தின் உற்பத்தி கேந்திரம். வெளிநாடுகளிலிருந்து முறையற்ற முறைகளில் பணம் வருவது போன்றவை நம்


நாட்டில் கருப்பு பண புழக்கத்தை அதிகரித்து நம் பொருளாதாரத்தை நசுக்கி வருகின்றது. ஒரு க்ரவுண்ட் நிலம் எழுபது லட்சம் எண்பது லட்சம் என்பது சென்னை , பெங்களூரு போன்ற நகரங்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அரசின் வழிகாட்டு விலைகள் (Guideline Value) எங்கும் பின்பற்றப்படுவதில்லை. நில விற்பனையின் போது விற்கும் / வாங்கும் விலையை விட குறைந்த விலைக்கே பதிவு செய்வது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது அது விற்பவர்களுக்கும் , வாங்குபவர்களுக்கும் ஸ்டாம்ப் ட்யூட்டி, டாக்ஸ் போன்ற சில பல விதங்களில் சாதகமாய் இருப்பதால் குற்றம் என்ற ஒரு நினைப்பே இல்லாமல் போய்விட்டது.

இவ்வாறு கணக்கில் வராமல் வாங்கப்படும் / கொடுக்கப்படும் பணம் "கருப்பு பணம்" வேறு ஒரு இடத்தில் நிலமாக திரும்ப முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு பணம் அதிகம் புழங்கும் துறையான பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சில இடங்களில் பத்திர பதிவு அலுவலக ஊழியர்களின் உதவியுடன் போலி பத்திரங்கள் தயாரித்து உரிமையாளருக்கு தெரியாமல் விற்பவை போன்ற குற்றங்களும் அடிக்கடி நடந்துவருகிறது என செய்தித்தாள்களில் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த பிசினசுக்கு பெரிய 'கோடி'ங் திறமை எதும் தேவை இல்லை என்பதால் 'குண்டா'ஸ் களும் அரசியல்வாதிகளின் பினாமிகளும் கன ஜோராக நடத்தி வருகின்றனர்.

ஏன்விலை இந்த அளவு உயர்கிறது என்ற அடிப்படை யோசனை கூட செய்யாமல் விட்டில் பூச்சியாய் 'ஒரு கூட்டம்' போய் விழுந்து கொண்டிருப்பதால் விலை மேலும் எகிறுகிறது.

சென்னையிலிருந்து நீங்கள் அரக்கோணம் ரயிலில் போகும்போது நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் வீடுகளோ , விவசாயமோ இல்லாத கல் நட்டு கம்பி கட்டப்பட்ட பல 'நகர்'களை பார்க்கலாம். எல்லாம் காலி நிலங்கள். எல்லை கோடுகளை வலியுறுத்தும் கற்களை தவிர புல் முளைத்த நிலப்பரப்பு. ஏன் காலி நிலங்களில் இவ்வளவு பளிச்சென பெயர் பலகைகள் கொண்ட ஆளில்லா நகர்கள்? காரணம், இன்று அதிக அளவில் பணம் புழங்கும் நில வியாபாரத்தினால் உண்டான ஆளவரமற்ற நகரங்கள் இவை. நில தரகர்களும் அவர்களது நிறுவனங்களும் தாம் இன்று பணம் மேலும் மேலும் சம்பாதித்து கொழுத்து கொண்டிருக்கிறார்கள். பெரும் நகரங்களில் வீடு அல்லது நிலம் வாங்குவது கனவென ஆன பின்பு நகருக்கு வெளியே நிலம் வாங்கிப்போடுவது அதிகரித்திருக்கிறது. அதை பயன்படுத்த இப்போதே பெரும் முதலைகள் வாங்கி குவித்திருக்கும் இடங்கள்தான் இந்த ஆளில்லா காலி நகர்கள்.

ரிசர்வ் வங்கி பணபுழக்கத்தை கட்டுப்படுத்த CRR (Cash Reserve Ratio) ஐ தொடர்ந்து உயர்த்தி வருவதால் பாதிக்கப்படுவது வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கியிருக்கும் சாதாரண சம்பளக்காரனே தவிர இத்தகைய கருப்பு பண முதலைகள் இல்லை. 2002 ம் ஆண்டுகளில் ஏழரை சதவிகிதத்திற்கும் எட்டு சதவீதத்திற்கு கூப்பிட்டு கூப்பிட்டு கடன் கொடுத்த வங்கிகள் இன்று ரிசர்வ் வங்கியின் இந்த கடுமையான நடவடிக்கைகளால் 12 முதல் 14 சதவிகிதமாக வீட்டு கடன் வட்டியை மாற்றி அமைத்துள்ளது. ஒரு சதவிகித வட்டி உயர்வு என்பது 20 வருட வீட்டு கடன் வாங்கியவருக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு என்பது இங்கு வருத்தத்துடன் குறிப்பிட வேண்டிய விசயம்.

கருப்பு பண புழக்கத்தை தடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனையை அரசால் சரி செய்ய இயலும், மேலும் விவசாய நிலங்கள் இப்படி நகர்களாக மாறிவருவது நம்மை எங்கு இட்டு செல்லுமோ என்பது புரியாத புதிர்.