a ப்பார் ஆப்பிள்
Posted On Thursday, July 24, 2008 at at 12:55 PM by மங்களூர் சிவாதொடருக்கு அழைத்ததற்கு நன்றி சந்தனமுல்லை
அடிக்கடி நுழையும் தளங்கள்.
Amfi India இந்திய ம்யூச்சுவல் பண்டுகளின் கூட்டமைப்பு எல்லா பண்டுகளின் NAV விலை விவரங்கள் அறிய, ம்யூச்சுவல் பண்டு விற்பனையாளராக AMFI Certification தேர்வு, விவரங்கள்
Bseindia மும்பை பங்குசந்தையின் வலைத்தளம். பங்குகள் பற்றிய எல்லாவிவரங்களும் கிடைக்கும்
Bharatmatrimony ஹிஹி கல்யாணத்துக்கு நெசமா பொண்ணு தேடறதா இருந்தாலும் தேடலாம் இல்லை சும்மா டைம்பாஸ்க்கு படமும் பாக்கலாம்
Blogger கூகுள் ஆண்டவனின் அடுத்த அவதாரம் இதில்லாம எதுவும் இல்லை :)
Camsonline இந்திய ம்யூச்சுவல் பண்டுகளின் (பெரும்பாலான) கஸ்டமர் கேர் சர்வீஸ் தளம்.
Dataone இணைய இணைப்பு எவ்வளவு உபயோகப்படுத்தியிருக்கிறோம் என அறிய (அது அன்லிமிடட் ப்ளானாகவே இருந்தாலும்)
Dinamalar தமிழ் செய்தி பத்திரிகை வலைப்பூ
Easymf இந்திய ம்யூச்சுவல் பண்டுகள் ரேட்டிங் சர்வீஸ்
Franklintempletonindia ப்ராங்ளின் டெம்பிள்டன் ம்யூச்சுவல் பண்ட் இணைய தளம் ஆன்லைன் மூலம் வாங்க விற்க.
Hindu online ஆங்கில செய்தி பத்திரிகை தளம் (எனக்கு மட்டும் சும்மா டைம் பாஸ் மச்சி !!)
IRCTC இந்திய ரயில்வே ஆன்லைன் ரிசர்வேசன் செய்யும் தளம்
Indian Railway இந்திய ரயில்வே முன்பதிவு இடவசதி / பிஎன்ஆர் ஸ்டேடஸ் அறிந்துகொள்ள உதவும் தளம்.
ICICI DIRECT ஐசிஐசிஐ டைரக்ட் இணைய பங்குவர்த்தக தளம்.
Just VOIP கம்ப்யூட்டரிலிருந்து வெளிநாடுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சில நாடுகளுக்கு இலவசமாக பேச உதவும் தளம்.
Money Control பங்கு வர்த்தக, ம்யூச்சுவல் பண்ட், வர்த்தக செய்திகள், போர்ட் போலியோ மேனேஜர் எல்லாம் இணைந்த அருமையான இணைய தளம்.
NSE India தேசிய பங்குச்சந்தை தளம். பங்குகளை பற்றிய எல்லா விவரங்களுக்கு.
NONOH நம் மொபைலிலிருந்து வெளிநாட்டு போன்களுக்கு இணையதள வழியாக மிக குறைந்த கட்டணத்தில் பேச உதவும் தளம்.
Prudential ICICI ப்ருடெண்சியல் ஐசிஐசிஐ ம்யூச்சுவல் பண்டின் வாங்க / விற்க போன்ற இணைய மூல சேவைக்கான தளம்.
Reliance Money ரிலையன்ஸின் இணைய பங்குவர்த்தக தளம். இந்தியாவிலேயே மிக மிக குறைந்த ப்ரோக்கரேஜ்.
Tube TAMIL தமிழ் டிவி ஷோக்கள், படங்கள், பாடல்கள் தரவிறக்கம் செய்ய
YaHoOoOoOoOoO யாகூ தெரியாதவங்க இருக்க மாட்டீங்க
You Tube விடியோ விடியோ விடியோ
ZD Net தொழில்நுட்பத்துறை பற்றிய எல்லா டெக்னிக்கல் சந்தேகங்களுக்கும்
நான் அழைக்க விரும்பும் மூவர் :சஞ்சய்
பாரதி
புதுகை தென்றல்
வழிநெறி:
தலைப்பு ::
‘ஏ ஃபார் ஆப்பிள் அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.
ஸ்டார்ட்!
.:: மை ஃபிரண்ட் ::.
Posted On Monday, July 21, 2008 at at 3:20 PM by மங்களூர் சிவா
வலையுலகத்துற்கே புதிய வார்த்தையை அதாங்க "மீ த ஃபர்ஸ்ட்டு " பழக்கிக்
கொடுத்தவரும் " தேன் கிண்ணத்தின் சுஜாதா சுனாமி " யுமான .:: மை ஃபிரண்ட்
::. அவர்களுக்கு இன்றைக்குப் பிறந்தநாள். அதனால அவருக்கு
மிகவும் பிடித்த பாடகி "சுஜாதாவே" பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாடிருக்காங்க. கேட்டு மகிழுங்க. அத்தோட நம்ம ஃப்ரண்டையும் வாழ்த்தலாம்
வாங்க!!
பிறந்த நாள் வாழ்த்துகள் அனு.
பி.கு : சித்தார்த்தா ? அது எவன்யா அது?
நட்சத்திர நன்றி! வர்ட்ட்ட்ட்டா.....
Posted On Sunday, July 20, 2008 at at 11:53 AM by மங்களூர் சிவாநன்றி வணக்கம்! வர்ட்ட்ட்ட்டா.....
கடந்த ஒரு வார காலம் நட்சத்திரமாய் ஜொலிக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும் பின்னூட்டங்களால் ஊக்கம் அளித்துவந்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
மங்களூர் சிவா
காதலே என் காதலே.......
Posted On Saturday, July 19, 2008 at at 10:41 AM by மங்களூர் சிவாசூரிய குடும்பத்து ஒன்பது கோள்களும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வாயில் நுழையாத பெயரிடப்பட்ட பத்தாவது கோளும் வேலை எதும் இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவரும் போது ராகுவும் கேதுவும் சூரியனும் சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் அக்னிப் பார்வையால் எதிரிகளாய் பார்க்கும் எதோ ஒரு கணத்தில் அந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது. அது எந்த கணம் தெரியவில்லை குறித்து வைத்திருந்தால் சுப்பையா வாத்தியாரிடமாவது வகுப்பறையில் பரிகாரம் கேட்டிருக்கலாம்.
முகம் மூக்கு வாயெல்லாம் ரத்தம் வர குப்புற விழுந்தேன் கால் இடறி. கோபத்துடன் அந்நியனாய் சுருளில்லாத என் தலைமுடி மூக்கு கண்களை எல்லாம் மறைக்க திரும்பி பார்த்தால் காலை இடறச் செய்திருந்தது காதல்.
இத்தனை காலம் காதல் இருக்கிறது என்று சொன்னவனை நம்பினேன், காதல் என்ற ஒன்றே இல்லை கிடையாது என்பவனையும் நம்பினேன், ஆனால் நான் காதலிக்கிறேன் என்று சொன்னவனை மட்டும் விரோதியை போல் பார்த்து வந்த என்னைத்தான் இடறி விழச் செய்திருந்தது அந்த காதல்.
காதலிக்கிறவனை நம்பாமல் விரோதியாய் பார்த்து வந்திருந்தாலும் காதல் என் வாழ்க்கையில் புதிதல்ல. உணர்வுகள் புரிய ஆரம்பித்த இறுதி எண்பதுகளிலிருந்து காதல் பலமுறை என்னுள் வந்து போயிருக்கிறது ராதாவாய், அமலாவாய், குஷ்புவாய், சிம்ரனாய், ஜோதிகாவாய், பாவனாவாய், நயந்தாராவாய் படம் பார்க்காமல் பாடலில் மட்டுமே பார்த்திருந்தாலும் கண்கள் இரண்டால் கட்டி இழுக்கும் புது நடிகை சுவாதி வரை. தமிழ் நடிகைகளை தவிர வேறு தெரியாமல் கிராமத்து சூழலில் வளர்ந்த என்னை கல்லூரியில் படிக்கும் போது ஹிந்தியில் ஏபிசிடி கூட எனக்கு தெரியாது என்ற போதும் ரங்கீலா என்ற படத்திற்கு நண்பர்கள் கூட்டி சென்ற விபத்தி்ன் முதற்கொண்டு ஊர்மிளா மதோந்கரும் இவர்களுக்கு போட்டியாக. இதில் ஆரம்பித்து ஐஸ்வர்யா ரை, ப்ரியங்கா சோப்ரா, வித்யாபாலன் என வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பெண்கள் காதலாய் வந்து போயிருந்ததால் காதல் ஒன்றும் புதிதல்லாத என்னை குப்புறதள்ளியிருந்தது அந்த காதல்.
சதையை மட்டும் கண்டால்
காதல் தெரியாது
காதல் வந்த பின்னால்
கண் மண் தெரியாது
என ஒரு கவிஞன் சொன்ன பின்பும் காதலையோ காதல் உணர்வுகளையோ நம்பாமல் நேசிக்காமல் ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகளையும், ஜட்டி கதைகளையும் தேடி படித்து வந்த என்னைத்தான் குப்புற தள்ளியிருந்தது அந்த காதல்.
பின்னர் எப்படி அதை அந்த கணத்தை அசம்பாவிதம் என்கிறாய் என கேட்பவர்களுக்கு சொல்ல வார்த்தை வராமல் என் மனம் தடுமாறுகிறது நெஞ்சம் விம்முகிறது கோபிகாவுக்கு கல்யாணமாம்.
வெட்ட வெட்ட துளிர்க்கும் செடி போல என்னுள் துளிர்த்து வந்திருந்த காதல்கள் வருங்காலங்களில் இனியும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையுடன் குப்புற விழுந்த நான் எழுந்து ஒட்டிக்கொண்ட மணலை தட்டிவிட்டு நிமிர்ந்து நடக்கிறேன் 'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய்' என பாடலை ஹம் செய்தபடியே!
இப்படிக்கு
அதீதன் (என்கிற )
அரூபன் (என்கிற )
விசித்திரன் (என்கிற )
ஆயில்யண்
'?' ரியல் எஸ்டேட்
Posted On Friday, July 18, 2008 at at 8:47 PM by மங்களூர் சிவாவிண்ணை முட்டும் விலைகள் வீடுவாங்குவது என்பது இனி நடுத்தர உயர் நடுத்தர வர்க்க மக்களுக்கு கனவாகவே போகுமோ என பயப்பட வைக்கிறது இந்திய ரியல் எஸ்டேட் விலை உயர்வு. இதற்கு தமிழ்நாடு கேரளா கர்னாநாடகா என எந்த பேதமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் இப்படி உயர்ந்திருக்கிறது. சென்னை போன்ற மெட்ரோக்கள் என்றில்லாமல் கோவை ,திருச்சி ,மதுரை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலைமை.
இதற்கு மிகமுக்கிய காரணம் இதில் புழங்கும் கருப்புபணம் . கருப்பு பணம் என்றால் என்ன? அரசிற்கு வருமானவரி கட்டாத எந்த ஒரு பணமும் கருப்புபணம்தான். எங்கெங்கு 'பில்' இல்லாத விற்பனை / சேவை நடைபெறுகிறதோ அங்குதான் கருப்பு பணத்தின் உற்பத்தி கேந்திரம். வெளிநாடுகளிலிருந்து முறையற்ற முறைகளில் பணம் வருவது போன்றவை நம்
நாட்டில் கருப்பு பண புழக்கத்தை அதிகரித்து நம் பொருளாதாரத்தை நசுக்கி வருகின்றது. ஒரு க்ரவுண்ட் நிலம் எழுபது லட்சம் எண்பது லட்சம் என்பது சென்னை , பெங்களூரு போன்ற நகரங்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அரசின் வழிகாட்டு விலைகள் (Guideline Value) எங்கும் பின்பற்றப்படுவதில்லை. நில விற்பனையின் போது விற்கும் / வாங்கும் விலையை விட குறைந்த விலைக்கே பதிவு செய்வது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது அது விற்பவர்களுக்கும் , வாங்குபவர்களுக்கும் ஸ்டாம்ப் ட்யூட்டி, டாக்ஸ் போன்ற சில பல விதங்களில் சாதகமாய் இருப்பதால் குற்றம் என்ற ஒரு நினைப்பே இல்லாமல் போய்விட்டது.
இவ்வாறு கணக்கில் வராமல் வாங்கப்படும் / கொடுக்கப்படும் பணம் "கருப்பு பணம்" வேறு ஒரு இடத்தில் நிலமாக திரும்ப முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு பணம் அதிகம் புழங்கும் துறையான பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சில இடங்களில் பத்திர பதிவு அலுவலக ஊழியர்களின் உதவியுடன் போலி பத்திரங்கள் தயாரித்து உரிமையாளருக்கு தெரியாமல் விற்பவை போன்ற குற்றங்களும் அடிக்கடி நடந்துவருகிறது என செய்தித்தாள்களில் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த பிசினசுக்கு பெரிய 'கோடி'ங் திறமை எதும் தேவை இல்லை என்பதால் 'குண்டா'ஸ் களும் அரசியல்வாதிகளின் பினாமிகளும் கன ஜோராக நடத்தி வருகின்றனர்.
ஏன்விலை இந்த அளவு உயர்கிறது என்ற அடிப்படை யோசனை கூட செய்யாமல் விட்டில் பூச்சியாய் 'ஒரு கூட்டம்' போய் விழுந்து கொண்டிருப்பதால் விலை மேலும் எகிறுகிறது.
சென்னையிலிருந்து நீங்கள் அரக்கோணம் ரயிலில் போகும்போது நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் வீடுகளோ , விவசாயமோ இல்லாத கல் நட்டு கம்பி கட்டப்பட்ட பல 'நகர்'களை பார்க்கலாம். எல்லாம் காலி நிலங்கள். எல்லை கோடுகளை வலியுறுத்தும் கற்களை தவிர புல் முளைத்த நிலப்பரப்பு. ஏன் காலி நிலங்களில் இவ்வளவு பளிச்சென பெயர் பலகைகள் கொண்ட ஆளில்லா நகர்கள்? காரணம், இன்று அதிக அளவில் பணம் புழங்கும் நில வியாபாரத்தினால் உண்டான ஆளவரமற்ற நகரங்கள் இவை. நில தரகர்களும் அவர்களது நிறுவனங்களும் தாம் இன்று பணம் மேலும் மேலும் சம்பாதித்து கொழுத்து கொண்டிருக்கிறார்கள். பெரும் நகரங்களில் வீடு அல்லது நிலம் வாங்குவது கனவென ஆன பின்பு நகருக்கு வெளியே நிலம் வாங்கிப்போடுவது அதிகரித்திருக்கிறது. அதை பயன்படுத்த இப்போதே பெரும் முதலைகள் வாங்கி குவித்திருக்கும் இடங்கள்தான் இந்த ஆளில்லா காலி நகர்கள்.
ரிசர்வ் வங்கி பணபுழக்கத்தை கட்டுப்படுத்த CRR (Cash Reserve Ratio) ஐ தொடர்ந்து உயர்த்தி வருவதால் பாதிக்கப்படுவது வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கியிருக்கும் சாதாரண சம்பளக்காரனே தவிர இத்தகைய கருப்பு பண முதலைகள் இல்லை. 2002 ம் ஆண்டுகளில் ஏழரை சதவிகிதத்திற்கும் எட்டு சதவீதத்திற்கு கூப்பிட்டு கூப்பிட்டு கடன் கொடுத்த வங்கிகள் இன்று ரிசர்வ் வங்கியின் இந்த கடுமையான நடவடிக்கைகளால் 12 முதல் 14 சதவிகிதமாக வீட்டு கடன் வட்டியை மாற்றி அமைத்துள்ளது. ஒரு சதவிகித வட்டி உயர்வு என்பது 20 வருட வீட்டு கடன் வாங்கியவருக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு என்பது இங்கு வருத்தத்துடன் குறிப்பிட வேண்டிய விசயம்.
கருப்பு பண புழக்கத்தை தடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனையை அரசால் சரி செய்ய இயலும், மேலும் விவசாய நிலங்கள் இப்படி நகர்களாக மாறிவருவது நம்மை எங்கு இட்டு செல்லுமோ என்பது புரியாத புதிர்.
பெண்களும் நிதி நிர்வாகமும்
Posted On Thursday, July 17, 2008 at at 12:58 PM by மங்களூர் சிவாசில நாட்கள் முன்பு விஜய் டிவியில் "நீயா நானா" எனும் நிகழ்சி பார்தேன் அதன் கரு -மனைவி உறவு எப்படிப்பட்டது பெண்கள் பணம் கையாளும் நிர்வாக சுதந்திரத்துடன் இருக்கிறார்களா என்று.
கணவன் மனைவி உறவென்பது தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவைப்போல அல்லது அதையும்விட சிறந்தது என பலரும் சொன்னார்கள். தாய் - மகன் என்பது ரத்த சம்பந்த உறவு. மனைவி என்பவள் அப்படி அல்ல இன்னோர் வீட்டில் வளர்ந்து திருமணம் எனும் பந்தத்தின் மூலம் நம் வீட்டிற்க்கு வந்து எல்லாமாக இருக்கிறாள் அவள் தாயினும் மேலானவள். என பலதரப்பட்ட விளக்கங்களை ஆண்கள் சொன்னார்கள்.
பெண்களும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் எல்லாமே அவர்தான், மறுபாதி, அவர் இல்லாமல் எதுவும் இல்லை என்றும் சொன்னார்கள்.
இன்றளவில் வேலைக்கு செல்லாத நடுத்தர குடும்ப பெண்களே இல்லை என சொல்லும் அளவுக்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றம் மிக சிறந்த மாற்றமாகும். சில பெண்கள் வேலைக்கு செல்லவேண்டியதில்லை என்ற பொருளாதார தன்னிறைவுடைய பின்னனியில் இருந்தாலும் லட்சியத்திற்காக வேலைக்கு செல்கின்றனர் இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம் ஆனால் பல இடங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்தான் ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் சுமாரான வாழ்க்கையை நடத்த முடியும் என்ற கட்டுக்கடங்காத அதி உயர் விலைவாசி சூழலும் நிலவி வருகிறது.
திருமணமான பெண்களிடம் நிதியை அதாவது பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு / சுதந்திரம் எந்த அளவு வழங்கப்பட்டிருக்கிறது? என விவாதம் தொடங்கியதும் மேற்சொன்ன எல்லாமே வெறும் வார்த்தை ஜாலமே என புரிந்து போனது.
திருமணம் வரை பெற்றோர் கவனிப்பில் இருந்து வந்தாலும் அப்போது தங்கள் தேவைகளுக்கான செலவுகளையும் சிற்சில ஆடம்பர செலவுகளையும் செய்யும் சுதந்திரத்துடன் பெண்கள் இருந்து வந்திருக்கிறார்கள்.
விவாதத்தில் கலந்து கொண்ட பெரும்பாலோனோர் கணவன் மனைவி இருவரும் பணியில் இருப்பவர்கள் என்பதுதான் இன்னும் வேதனை. இதில் உச்சமாக ஒருவரின் துணைவியார் சொல்கிறார் எங்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது என் கணவரின் சம்பளம் எவ்வளவு என்றே எனக்கு தெரியாது என :(. இதில் தவறு எங்கிருக்கிறது ஆணாதிக்கமா? பெண்கள் பொறுப்பை எடுத்துக்கொள்ள தயங்குகிறார்களா? மறுக்கப்படுகிறார்களா? நிதி நிர்வகிக்கும் திறன் அற்றவர்களா?
பெண் என்பவள் நிதி நிர்வகிக்கும் திறனற்றவளாக இருக்கமுடியாது, ஒரு சிலர் இருக்கலாம் ஆண்களிலும் இருப்பார்கள் அவர்களை பற்றி பேசவேண்டாம் பெரும்பாலோனோர் பற்றி பேசுவோம். ஒரு நிறுவனத்தில் ப்ரொக்ராமரார், அனலிஸ்டாக, ப்ராஜக்ட் மேனேஜராக நிர்வாகியாக இருக்கும் பெண்கள் எப்படி நிதி நிர்வாகம் செய்ய திறனற்றவர்களாக இருக்க முடியும்?
பெண்கள் மேல் சொல்லப்படும் குற்றச்சாட்டு என்ன? ஆ ஊ என்றால் புடவை வாங்கிவிடுகிறார்கள், நகை வாங்கிவிடுகீறார்கள், செலவுக்கு கணக்கு வைத்துக்கொள்வதில்லை என்பவைகள். ஆண்களின் ஆடம்பர அனாவசிய செலவுகளான புகைபிடித்தல், பார்ட்டிக்கு போவது, ட்ரிங்க்ஸ் போன்ற செலவுகளுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை.
கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால், மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது.
இது பெரும்பாலான வேலைக்கு செல்லும் / செல்லாத திருமணமான நடுத்தர குடும்ப பெண்களின் நிலைமையை மனதில் இருத்தி எழுதப்பட்டது. விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு.
நல்ல மாற்றங்கள் அவசியம்.
மாறும் நம்புவோம்.
மருத்துவ காப்பீடு
Posted On Wednesday, July 16, 2008 at at 1:28 PM by மங்களூர் சிவாசென்னையில் 97 – 98 ம் ஆண்டுகளில் பணிபுரிந்தவர்கள் இருக்கிறீர்களா, அப்போதைய சராசரி மாத வருமானம் எவ்வளவு?. க்ளெரிகல் வேலைக்கு பி.காம், பி.எஸ்சி படித்தவர்களின் மாத சம்பளம் 1500லிருந்து அதிக பட்சம் 3000 ரூபாய்கள்தான்.
போன மாதம் என் நண்பர் ஒருவர் உடல் நலமில்லாமல் சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு "ஒரு நாள்" அறை வாடகை இரண்டாயிரத்து நூறு ரூபாய்கள் இதைத்தவிர மருத்துவர், மருத்துவ, மருந்து செலவுகள் தனி. இந்த வேகத்தில் பணவீக்கம்/விலை உயர்வு அதிகரித்து சென்றால் இன்னும் பத்து வருடம் கழித்து மருத்துவமனை செல்லும் போது அறை வாடகை அப்போது நாள் ஒன்றுக்கு பத்தாயிரம், பதினைந்தாயிரம் இருந்தால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. பதினோரு நாள் அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பும்பொழுது வந்த பில் அறுபத்தி நான்காயிரம் ரூபாய்கள்.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பிறகும் வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள் அதற்கு ஆகும் மாத செலவு பணிரெண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை. இன்றைக்கு நாட்டில் பெட்ரோல், பால், மளிகை , வாடகை என எல்லா துறைகளிலும் விலைவாசி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அதிகரித்து வருகிறது. வாழ்க்கையை ஓட்டுவதே மிக சிரமமாக மாறி சேமிப்பது மிக கடினம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய வேகமான உலகில் பணம் ஈட்டும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நம் ஆரோக்கியம் பற்றி எந்த அளவு அக்கரை கொண்டுள்ளோம் என்பது அவரவர்க்கு நன்கு தெரியும். இது போதாதென வாகன நெருக்கடி நெரிசலால் மாசுபட்ட காற்று, சுத்தமில்லாத குடிநீர், உணவுப்பொருட்களில் கலப்படம் , ஆரோக்யமற்ற பணி சூழல் அதனால் விளையும் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்), துரித உணவுகள் எல்லாம் நம் ஆரோக்யத்துடன் விளையாடி வருகின்றன.
அரசு மருத்துவமனைகளுக்கு செல்லலாம் எனில் பெரும்பாலான நூற்றுக்கு 99 சதவிகித அரசு மருத்துவமனைகள் போதிய வசதிகள், மருத்துவர்கள் இல்லாமல் சுகாதாரமில்லாமல் அங்கு செல்வதால் வேறேதும் நோய் வந்துவிடுமோ என அஞ்சும் அளவிலேயே உள்ளது. (டாக்டர் புருனே மன்னிக்க)
சாதாரண நடுத்தர மக்கள் பெரிய மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை பெறுவது என்பது விண்ணை முட்டும் கட்டணங்களால் இயலாத ஒன்றாகவே உள்ளது. சாதாரண மக்கள் பெரிய தரமான மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவே முடியாதா?
முடியும்.
மருத்துவ காப்பீடு இருந்தால். முப்பது வயதுக்கு குறைந்த ஒருவருக்கு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய்களுக்கு சிகிச்சை பெற வருடத்திற்கான ப்ரீமியம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்களுக்குள் என்ற மிக சிறிய தொகையாகும். சிறிய வயதிலேயே இந்த பாலிசிகளை எடுக்கும்போது மருத்துவ சோதனைகள் பெரும்பாலும் இருக்காது. வயது அதிகரிக்க அதிகரிக்க கட்ட வேண்டிய தொகையும் அதிகரிக்கும், மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தி பாலிசியை வழங்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.
யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களும் பல்வேறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த சேவையை வழங்கி வருகின்றனர். சில நிறுவனங்களில் ஏற்கனவே உடலில் இருக்கும் நோய்களுக்கு இந்த திட்டத்தில் க்ளைம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள் ஆனால் சில வருடங்கள் கழித்து அவைகளுக்கும் கிடைக்கலாம் உதாரணத்திற்கு ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் மெடிக்ளைம்-ல் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஏற்கனவே உள்ள நோய்களுக்கும் சிகிச்சைக்கு பணம் தரப்படுகிறது. பாலிசி எடுக்கும்போது இவற்றை நன்கு படித்து பின்பு எடுக்கவும்.
சில மேலை நாடுகளில் மருத்துவ காப்பீடு கட்டாயம் என்கிற நிலை உள்ளது இந்தியாவில் அவ்வாறு ஏதுமில்லை. காப்பீடு இல்லாமல் இருபது , முப்பதாயிரம் பெருமானமுள்ள இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது , சில லட்சங்கள் பெருமானமுள்ள நான்கு சக்கர வாகனம் ஓட்ட முடியாது ஆனால் விலைமதிப்பற்ற மனிதன் உயிருக்கோ, மருத்துவத்திற்கோ காப்பீடு இல்லாமல் இருக்க முடியும் என்பது வேதனை.
சில பயனுள்ள இணைப்புகள்
நியூ இந்தியா இன்சூரன்ஸ் தனிநபர் மெடிக்ளைம்
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் மெடிக்ளைம்
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்
'?' கேள்விக்குறி.
Posted On at at 10:06 AM by மங்களூர் சிவாபடித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எல்லா வகுப்பினரும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உடையது இந்தியா. நம் இந்திய தேசம் பல சிக்கல்கலான கட்டமைப்பை கொண்டுள்ள தேசம். அனேகமாக இந்த நிலைமை எல்லா நாட்டிலும் இருக்கும்.
ஏற்கனவே தொழில்நுட்ப வளர்ச்சி காரணமான உயர் சம்பள வர்க்கத்தினர் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணம் இருப்பவரிடம் மேலும் மேலும் பணம் சேர்வது, பணம் இல்லாதோர் மேலும் நலிவது போன்ற சமச்சீரற்ற பொருளாதார நிலமை நிலவிவருகிறது.
விவசாயம், விவசாயிகள் நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது. இன்றளவில் விவசாயம் என்பது லாபம் இல்லாத தொழில் என பலரால் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயி தற்கொலை என்பதான செய்தி தினசரிகளில் தினம் வருவது வாடிக்கையாகிவிட்டது.
விவசாயவேலைக்கு செல்வதைவிட கட்டிடம் கட்டும் தொழிலில் வருமானம் அதிகம் இருப்பதால் பெரும்பாலான தினகூலி ஊழியர்கள் கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்றுவிடுவதால் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. தினக்கூலி ஊழியர்கள் கட்டிடம் கட்டசெல்வதையும் தவறென கூற இயலாது அவர்கள் வாழ்க்கையை நடத்த எங்கு பணம் அதிகம் கிடைக்கிறதோ அங்கு செல்கிறார்கள்.
ஒருபுறம் இவ்வாறான தேய்வுபாதையில் போய்கொண்டிருக்க நகரங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருவதும் கண்கூடான உண்மை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பிருந்த சென்னையை இப்போது நினைத்துக்கூட பார்க்க இயலாது. பல்லாவரம், தாம்பரத்தை சென்னையிலிருந்து வெகுதூரமாக கருதிய காலம் மாறி திருவள்ளூர் , செங்கல்பட்டு, மறைமலைநகர் எல்லாம் சென்னை என்பது தற்போதைய நிலைமை.
சிறு சிறு அங்காடிகளில் பொருட்களையும் , காய்கறிகளையும் வாங்கி வந்த நாம் இன்று ஷாப்பிங் மால்கள் எனப்படும் பெரும் வணிக அங்காடிகளில் பொருட்களையும் , காய்கறிகளையும் வாங்கிக்கொண்டிருக்கிறோம், மிக வேகமாக விண்டோ ஷாப்பிங் எனும் கலாச்சாரத்திற்கு மாறி வருகிறோம்.
சிறுவியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்பவர்கள் என கோடிக்கணக்கானவர்களின் வாழ்வே இதனால் கேள்விக்குறியாக மாறிவிட்டது. படித்தவர்களுக்கே வேலை இல்லை எனும்
நிலைமை இருக்கும் பொழுது திடீர் என இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் நிலைமை பரிதாபம்தான். காய்கறிகள் விற்பனை செய்வது
போன்றவற்றிற்கு இத்தகைய பெரும் ‘வணிக வளாகங்களை’ அனுமதித்த அரசு சிறுவியாபாரிகள், தெருவோர, தள்ளுவண்டியில் விற்று பிழைப்போருக்கு எந்தவிதமான மாற்று ஏற்பாட்டையாவது செய்துள்ளதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி.
காத்திருந்த காதலன்
Posted On at at 9:44 AM by மங்களூர் சிவாசார் நாங்க ட்ரிபிள் ஒய் டிவி ல இருந்து வரோம் நீங்கதான் ஸ்டாராமே அதனால நாங்க எடுக்கிற சீரியல்ல நீங்கதான் நடிக்கனும்.
யோவ் நான் இன்னும் 4 நாளைக்குதான்யா ஸ்டார் அதுக்கப்புறம் வேற வேற ஆளுங்க வந்துகிட்டே இருப்பாங்க ஸ்டாரா, சீரியல்னா வருச கணக்கா இல்ல இழுப்பீங்க.
இப்ப ஆரம்பிக்கிறோம் நீங்க ஸ்டாரானத மறந்து ஒரு பத்து வருசம் கழிச்சி மறந்துபோய் திரும்ப ஸ்டாரா ஒருவேளை போட்டா அப்ப முடிச்சிருவோம்.
அவ்வ்வ்வ்வ்வ்
அதாவது இந்த கதைல நீங்க ஒரு பொண்ணை தெர்த்தி தெர்த்தி காதலிக்கிறீங்க ஆனா அந்த பொண்ணு உங்களை கண்டுக்கறதே இல்லை. நீங்க தெர்த்தற அந்த பொண்ணு நிஜமா நல்லவரை காதலிக்கிது.
ஓ அப்ப நான் இந்த சீரியல்ல கெட்டவனா, வில்லனா?
இல்ல கேரக்டர் பேரே அதுதான் கந்தசாமி, குப்புசாமி , முனுசாமிங்கிற மாதிரி நெஜமா நல்லவன். ஆனா அந்த காதல்ல ஒரு இடியாப்ப சிக்கல் வருது இன்னொரு கேரக்டர் மூலமா.
நீங்க காதலிச்சி உங்களை காதலிக்காம நெஜமா நல்லவரை காதலிக்கிற அந்த பொண்ணை ரூட் விட்டுகிட்டிருக்கார் தமிழன்.
யோவ் அப்ப நான் என்ன கன்னடிகாவா, இல்ல நெஜமா நல்லவன் என்ன சிங்கப்பூரானா எதோ பொழைக்க இங்க வந்து அஞ்சாறு வருசம் ஆச்சு அதுக்கு இப்படியா?
கூல் கூல் இங்க அந்த கேரக்டர் பேரே தமிழன். ராத்திரியானா போதும் டெய்லி அந்த பொண்ணு வீட்டாண்ட சைக்கிள் எடுத்துகிட்டு வந்து கேரியரை தட்டறார் தமிழன். கேரியரை தட்டி தட்டி அவர் எழுப்பற அந்த சத்தம் இளையராஜா , ஏ.ஆர்.ரகுமான் மியூஜிக் எல்லாம் விட அருமையா இருக்க போக அந்த பொண்ணு மயங்கி தமிழனையும் காதலிக்க ஆரம்பிக்கிறா அவளுக்கு தெரியாமலேயே ஆனா நெஜமா நல்லவனையும் மறக்க முடியலை.
தமிழன் இப்பிடி ஒரு நாள் ராத்திரி கொல்லன் பட்டறைல இரும்பு அடிக்கிறமாதிரி சைக்கிள் கேரியரை போட்டு அடிச்சிகிட்டிருக்கப்ப மயங்கின அந்த பொண்ணு நைஸா வீட்டுக்கு தெரியாம எஸ் ஆகி போய் உக்காந்து பேசுது. ஒருவழியா பேசி முடிச்சி ரெண்டு பேரும் ஓடிப்போயிடலாம்னு முடிவு பண்ணி எழுந்து ஓடறாங்க ஆனா அங்க உக்காந்து பேசின மணல் மேட்டுலயே அவங்களோட காதல்மட்டும் குவிஞ்சி கெடக்கு அதைக்கூட பாக்காம விட்டுட்டு தலைதெறிக்க ஓடறாங்க.
தமிழன் கால்ல முள்ளு குத்தி நின்னுட்டதுகூட தெரியாம அந்த பொண்ணு ஓடுது. ஓடற அவசரத்துல யார்கூட ஓடறோம்னு கண்ணு மண்ணு தெரியாம அந்த பொண்ணு ஓடுது அப்ப ஒரு புது கேரக்டர் இண்ட்ரொ பண்றோம் அந்த பொண்ணு கூட ஓடறது சஞ்சய்.
மயங்கியது போல விழுந்து கிடக்கிறேன்.
காதல் எனப்படுவது யாதெனில் !?!?!?!?
Posted On Monday, July 14, 2008 at at 11:32 PM by மங்களூர் சிவாபடித்து முடித்திட
முடியா பாற்கடல்
படித்த பின்பும்
புரியா பாடமவள்
காலைச் சுற்றும்
நாயவள்
விழித்திருக்கும் போதும்
கனவு அவள்
இருப்பதைப் போல்
இல்லாதவள்
இல்லாதவள் போல்
இருப்பவள்
தேவதை கட்டிய
தாவணியவள்
சுடிதார் போட்ட
தேவதையவள்
அங்கும் இங்குமாய்
ஈருடல்
நினைவுகளுடன் தினம்
போராடல்
கொஞ்சும் குழந்தையவள்
இளமை பொங்கும்
குமரியவள்
தாய் அவள்
சிரிப்பில் கொல்பவள்
அன்பில் வெல்பவள்
இயக்கிடும் இயக்கமவள்
உயிர் அவள்
மயக்கிடும்
உயிரியக்கிடும்
மங்களம் தருவாள் மங்களாம்பிகை
Posted On at at 4:24 PM by மங்களூர் சிவாமங்களம் தருவாள் மங்களாம்பிகை
மங்களூர் என்ற ஊரின் பெயர் பெருமையே மங்களாதேவி திருக்கோவில் அமையப்பெற்றுள்ளதே. மங்களாதேவி திருக்கோவில் மங்களூர்-செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதாகும். (மங்களூரில் மங்களூர் செண்ட்ரல், மங்களூர் ஜங்ஷன் என இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளது.).
தக்ஷின கன்னடாவை தோற்றுவித்தவர் பரசுராம். பரசுராமின் கனவில் அன்னை கூறியபடி நேத்ராவதி, குமாரராதா, பால்குனி எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் மங்களாதேவி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
தசரா (நவராத்திரி) 9 நாட்களும் இங்கு அன்னை மங்களா தேவிக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மங்களா பார்வதி விரத பூஜை செய்பவர்களுக்கு மனம் விரும்பும்படி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
மங்களூரில் பார்க்க வேண்டிய இன்னும் இரு புராதாண கோவில்கள் கதிரி மஞ்சுநாதர் ஆலயம், குதிரொளி கோகர்நாத் ஆலயம்.
கதிரி மஞ்சுநாதர் ஆலயம்
கதிரி மஞ்சுநாதர் (சிவன்) மங்களூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலும் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒன்றாகும்.
காசிபாகீரதி தீர்தம்
இங்கு காசிபாகீரதி எனும் தீர்தத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் வந்து 'கோமுக' எனப்படும் குளங்களை நிறைக்கிறது.
குதிரொளி கோகர்நாதர் ஆலயம்
குதிரொளி கோகர்நாதர் ஆலயம் 1912ல் நாராயண குரு என்பவரால் கட்டப்பெற்றது. பழைய கேரள ஆலையங்களை போன்று வடிவமைக்கப்பட்ட இந்த கோவில் 1991ல் சோழர்கால ஆலயத்தை போன்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்டது. சலவைக்கற்களால் இழைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான கோவில் பார்ப்பதற்கு மிக ரம்மியமான ஒன்றாகும். நவராத்திரி 9 தினங்களும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலும் நகரத்தின் மிக மத்தியில் அமையப்பெற்றுள்ளது.
மங்களூரை சுற்றி
கட்டில் துர்கா பரமேஷ்வரி
கட்டில் துர்கா பரமேஷ்வரி ஆலயம் மங்களூரில் இருந்து 29 கி.மீ தொலைவில் நந்தினி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. ஆலயத்தின் இருபுறமும் ஆறு அலைபுரண்டு ஓடுவதை பார்க்க கண்கொள்ளா காட்சியாகும்.
உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்
உடுப்பி கிருஷ்ணர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த ஆலயம் ஆகும். மங்களூரிலிருந்து 60 கி.மி தொலைவில் உள்ளது.
கொல்லூர் மூகாம்பிகா
கொல்லூர் மூகாம்பிகா மங்களூரிலிருந்து 130 கிமீ , உடுப்பியிலிருந்து 70 கிமீ.
சிருங்கேரி
சிருங்கேரி மங்களூரிலிருந்து 100 கிமீ.
கொல்லூரிலிருந்து சிருங்கேரிக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் 60கிமீ.
ஹொரநாடு அன்னபூர்ணேஷ்வரி
மங்களூரிலிருந்து 200 கிமீ.
சிருங்கேரியில் இருந்து ஒன்றரை அல்லது இரண்டு மணி நேர பயணம் (மலைப்பாதை தூரம் குறைவு).
தர்மஸ்தலா
மங்களூரிலிருந்து 70கிமீ. ஹொரநாடிலிருந்து மங்களூர் வரும் போது செல்ல முடியும்.
சுப்ரமண்யா
மங்களூரிலிருந்து 100 கிமீ.
(தர்மஸ்தலாவிலிருந்து மங்களூர் வரும் முன்பு பார்க்கலாம். )
மேலே உள்ள வரிசைப்படி கோவில்களை பார்த்து வந்தால் இரண்டரை நாட்கள் அல்லது மூன்று நாட்களில் மேலே உள்ள அனைத்து கோவில்களையும் பார்க்க முடியும்.
ஜூன் முதல் அக்டோபர் வரை மழைக்காலம் இங்கு வருடத்தில் 5 முதல் 6 மாதங்கள் நல்ல மழை பெய்வதால் பயணதிட்டம் போடும்போது கவனத்தில் கொள்வது நல்லது.
நட்சத்திர வணக்கம்
Posted On at at 8:34 AM by மங்களூர் சிவாநட்சத்திர வணக்கம்
தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்க வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்திற்கும் என் வலைப்பூ பதிவுகளுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வரும் அன்பு நண்பர்களுக்கும் மின்னஞ்சல், தொலைபேசி, கூகுள் சாட் மூலமாக என்னுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டுவரும் நட்பு சொந்தங்களுக்கும் இந்த சமயத்தில் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
விளையாட்டாய் “கேட்டுக்கங்கப்பா நானும் ப்ளாகர்தான்” என வடிவேலு ஸ்டைலில் சொல்லிக்கொண்டு வந்த என்னை பதிவராக மற்றும் நண்பனாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஆகஸ்ட் 2007ல் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு மூன்று மாதங்கள் கழித்துதான் தமிழ்மணம் தெரியவந்து இணைத்தேன் சரியாக ஒரு வருட காலத்திற்குள் நட்சத்திர வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
(மேல ஸ்டார் வணக்கம்,
இது ஸ்டாரினி வணக்கம் ச்சும்மா கொசுறு)
ஸ்டாரினி வணக்கத்தை இரண்டாவதாக போட்டதற்கு வரும் கண்டன பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது :))))
ஒரு முறை நண்பர் ஒருவரிடம் கூகுளில் சாட்டிக்கொண்டிருந்தபோது விளையாட்டாய் சொன்னேன் நான் மங்களூரிலிருந்து பதிவெழுதி தமிழை வளர்த்து வருகிறேன் என, அதற்கு அவர் சொன்னார் ஆமாம் தமிழை வேறு யாரும் கொலை செய்ய அனுமதிக்க மாட்டோம் நாமே அதை செய்திடுவோம், இனி தமிழை யாராலும் அழிக்க முடியாது நீ ஒருவனே போதும் என :). (என் பதிவுகளால் அவர் ரொம்ப சேதாரப்பட்டிருப்பாரோ என்னவோ) என் மேல் இருக்கும் அக்கறையில்தான் சொன்னார். பல நண்பர்கள் இவர்போல்.
ஆரியம் - திராவிடம், மதம், ஜாதி அரசியல், ஆணீயம் - பெண்ணீயம், கம்யூனிசம் -சோசலிசம், வினை - எதிர்வினை, நவீனத்துவம் - பின் நவீனத்துவத்தை எல்லாம் தாண்டிய அருமையான நட்புவட்டம் கிடைக்க பெற்ற இடம் இந்த தமிழ் வலைப்பூவுலகு.
பாலையும் , நீரையும் கலந்து வைத்தால் நீரை விடுத்து பாலைமட்டும் அருந்துமாம் அன்னப்பறவை அதுபோல நல்லவை கெட்டவை என வலையுலகிலும் வலைப்பூவுலகிலும் குவிந்திருந்தாலும் நல்லவை மட்டும் எடுத்து அல்லவை தவிர்த்து எல்லோரும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக.