கரண்ட் பாலிடிக்ஸ்
Posted On Saturday, March 1, 2008 at at 10:53 AM by மங்களூர் சிவாமுன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம போயிட்டே இருக்கனும்! ஆமா!
கிஷ்டன்: குர்ஜுனா! இணையச் சேவைகளை மதிக்கக் கற்றுக் கொள்! வலைப்பூக்களில் அனானிமஸாய்ப் புகுந்து வலைப்பதிவர்களை கடைமட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு திட்டத் தயங்காதே!
குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா! வலைப்பூ வைத்திருப்போர் என் அருமை நண்பர்கள், தமிழ்மணத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பெரியோர்கள், வல்லுனர்கள், அவர்களுக்கெல்லாம் எப்படி நான் இத்தகைய பின்னூட்டம் இடுவேன்.
கிஷ்டன்: குர்ஜுனா! இந்தக் கணத்தில் உனக்கு எதிரியோ நண்பனோ யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வலைப்பதிவர்கள். எனவே, இணைய தர்மத்தை கடைப்பிடிப்பாயாக! எல்லோருக்கும் பின்னூட்டம் இடு முடிந்தவரையில் திட்டு! அதுதான் உன் கர்மம்! அதுவே தர்மமும் ஆகும்.
குர்ஜுனன்: கிஷ்டா! இவையெல்லாம் பார்த்தால் இணைத்தின் இணைப்பையே துண்டித்துக் கொள்ளத் தோன்றுகிறது
கிஷ்டன்: குர்ஜுனா! வலைப்பூ என்னும் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளாய். இந்த மாய உலகில் நீயும் மாயை உன்னால் திட்டப் படுபவரும் மாயை. வலைப்பூக்கள் தோன்றும் முன்பிருந்தே இது போல ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது குழுமங்களிலும் மற்ற வலைத்தளங்களிலும் இருந்துள்ளது. நீ செய்யாவிட்டாலும் இதை வேறொருவர் செய்வார். கீழ்த்தரமாய் பின்னூட்டம் இடுவது உன் கடமை! அதைச் செய்!
குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா!கிஷ்டன்:குர்ஜுனா! திட்டப் படுபவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே! உனக்குத் தெரிந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் கேவலமான சிந்தனைகளையும் உலகுக்கு தெரியவைக்கத் தவறிவிடாதே!
குர்ஜுனன்: கிஷ்டா! கீழ்த்தரமாய் பின்னூட்டம் இட்டு, திட்டுவதற்கும் சாதி மத பேதங்களுக்கும் என்ன சம்பந்தம்.
கிஷ்டன்: குர்ஜுனா! இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கும் இன்னொருவருக்கும் மனக்கசப்பு என்றால் முதலில் சாதியைக் கொண்டு திட்டவேண்டும். அப்போது தான் சாதி சார்பாக இன்னும் சில பேர் திட்டுவதற்காக அணி திரள்வார்கள். இப்படியாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது பல விதமான மூன்றாம் தர வார்த்தைகள் வலைப்பூ உலகின் வருகையாளருக்கு அறிமுகமாகும். இதனால் தமிழ் மொழி அபரிமிதமான வளர்ச்சியடையும்.
குர்ஜுனன்: கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.கிஷ்டன்: இத்தகைய வார்த்தைகள் உடனடியாய் எதிராளியைக் காயப் படுத்த வல்லவை. இந்த வார்த்தைகளால் மனம் பாதிக்கப் பட்டவர்களை வழக்காடு மன்றம், வழக்கறிஞர் என்றெல்லாம் சிந்திக்க வைக்குமளவுக்கு கொடூரமானவை.
குர்ஜுனன்: கிஷ்டா! திட்டுவோருக்கு இதனால் என்ன பலன்.
கிஷ்டன்: குர்ஜுனா! எல்லாம் மாயை! திட்டும் போது எழுவது ஒரு அல்ப சந்தோசம். சாதியால், மதத்தினால், இன்ன பிற காரணங்களால் வலைப்பூவுலகம் பிளவுற்று, தரமான படைப்புகள் குறைந்திடும் போது இந்த அல்ப சந்தோசம் அதிகரிக்கும். இந்தத் திட்டுக்கள் சண்டைகள் தொடர்பான பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கையில் அது பலமடங்கு பெருகி பிறந்த பலனை அடைந்த இன்பம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை யாரும் அறியார். உனது கடமை யாரையேனும் திட்டிப் பின்னூட்டம் இடுவது! இதை எப்போதும் உன் மனதில் வை!
குர்ஜுனன்:கிஷ்டா!திட்டும் போது என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய?
கிஷ்டன்: இந்த வலைப்பூ உலகம் என்னும் மாயையில் திட்டுவது எப்படி உன் கடமையோ அது போலவே உன்னோடு அணி சேர்வது சிலரது கடமை.உன் எதிரணியில் சேர்வது இன்னும் சிலரின் கடமை. எனவே பயம் ஏதும் கொள்ளாமல் உன் கடமையைச் செய்!
குர்ஜுனன்: கிஷ்டா! அறியாமையில் உழன்று கொண்டிருந்த என் கண்களைத் திறந்திட்டாய். வணங்குகிறேன்.(கிஷ்டனின் உபதேசத்தில் மனம் தெளிவடைந்த(!) குர்ஜுணன் அடுத்த சாதிச் சண்டைக்கு பின்னூட்டமிட செல்கிறான்)
பின் குறிப்பு: நன்றி கோபி அவரின் 2005ம் வருட இந்த பதிவு இப்போதைய தமிழ்மண நிகழ்வுகளை பிரதிபலிப்பதால ஒரு மீள்பதிவு