சூறாவளியாய் இரு பதிவர் சந்திப்புகள்

சூறாவளியாய் இரு பதிவர் சந்திப்புகள்

திங்கட்கிழமை ஒரு வேலையாக தருமபுரி செல்ல வேண்டியிருந்தது. சரி திரும்பும் வழியில் பெங்களூரில் செவ்வாய்கிழமை காலை நம் ப்ளாக் நண்பர்கள் யாரையாவது சந்தித்து வரலாம் என மங்களூரிலிருந்து சேலத்திற்கு ஞாயிறு இரவு ட்ரெயின்க்கு செல்வதற்கு மட்டும் ரிசர்வ் செய்திருந்தேன்.

ஜீவ்ஸ்க்கு போன் செய்து செவ்வாய்கிழமை வருகிறேன் சந்திக்கலாம் என சொன்னதும் அலுவலகம் இருக்கிறது ஆனால் காலையில் சீக்கிரம் வந்தால் பார்க்கலாம் என சொன்னார். சரி என இம்சைஅரசிக்கு போன் செய்தால் ஹலோ டைம் என்ன? எதுக்கு நடுராத்திரி போன் செய்யறீங்க என கேட்டார் நான் போன் செய்தது சனிக்கிழமை காலை 10 மணிக்கு. செவ்வாய்கிழமை சந்திக்க முடியாது வேலை இருக்கிறது என அவர் சொல்லியதால் நாளை ஞாயிற்றுகிழமை வந்தால் சந்திக்க முடியுமா என கேட்டதற்கு சரி என சொன்னார்.

என் பயணத்திட்டத்தை மாற்ற ட்ரெய்ன் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு கர்னாடகா அரசு பேருந்து ‘ராஜஹம்ஸா’வில் டிக்கட் புக் செய்து 11 மணி நேர கொடுமையான பயணத்தில் (ரோடு நல்லா இல்லிங்க) பெங்களூர் சென்றடைந்தேன். 6 மணிக்கு இறங்கின உடனே கை கால் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பிச்சிடிச்சு அவ்வளவு குளிர்.

என் கசின் வீட்டிற்கு அருகில்தான் ஜீவ்ஸ் இருக்கிறார் காலை 10 மணிக்கு கரெக்டாக டிபன்க்கு போய்விட்டேன் அவர் வீட்டம்மணி ரொம்ப பொறுமைசாலி வெர்மிசெல்லி உப்புமா, இடியாப்பம் செய்திருந்தார். பத்தே முக்கால் சுமாருக்கு இம்சை அரசி வந்தார். மொக்கையாக எதேதோ பேசிக்கொண்டிருந்தோம். ஜீவ்ஸின் மகள் ஜெயஸ்ரீ தர்பீஸில் இருந்த எல்லா விதையையும் எடுத்து இம்சைஅரசி சாப்பிடும் தட்டில் போட்டு எங்களுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள்.

வாழைப்பூ வடை, முருங்கை கீரை பொறியல், சாம்பார், ரசம், தயிர் என மதியம் செம சாப்பாடு ஏற்கனவே 11 மணி நேர பயணகளைப்பிருந்ததால் அங்கேயே மாலை 5 மணி வரை தூங்கிவிட்டேன். பின் அருகிலிருந்த ஜே.பி. பார்க் சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு திரும்பினோம்.


திங்கட்கிழமை காலை ப்ளாகர், முத்தமிழ் குழும மை.பா. புகழ் எழுத்தாளினி ஷைலஜா அக்கா வீட்டிற்கு போவதாக திட்டம். ஏர்போர்ட் ரோடிலிருக்கும் ஐபிஎம் அலுவலகத்தில் என் கசின் வேலை பார்ப்பதால் அதுவரை அவனுடன் பைக்கில் சென்றுவிட்டு அவன் வண்டியை எடுத்துகொண்டு ரோட் மேப் வாங்கிக்கொண்டு அங்கிருந்து பி.டி.எம் லே அவுட்க்கு பயணம். புதிய ஊர் என்பதால் அங்கங்கு கேட்டு கேட்டு தட்டு தடுமாறி 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு 1 மணி நேரத்தில் சென்றடைந்தேன்.

மை.பா கொடுத்து வரவேற்றார். காலை டிபன் அவர் வீட்டில் தோசை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே கணக்கு வழக்கில்லாமல் சாப்பிட்டேன். அசரலையே :(

அவர் எழுதிய கதைகள் வெளிவந்துள்ள புத்தகங்கள் வாங்கிய பரிசுகள் போன்ற விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டேன். அவர் செய்திருந்த பெயிண்டிங்கள் எல்லாம் பார்த்தேன். அடடா நாமளும் படத்தை போட்டு ஒப்பேத்தறோமே என எனக்கே ரொம்ப வெட்க வெட்கமா வந்தது (அட நெசமா நம்புங்கப்பா). மதியம் சாப்பிட்டுவிட்டு போக சொன்னார். காலையில் அத்தனை தோசை சாப்பிட்டு கொடுத்த அதிர்ச்சியே போதும் என நான் நினைத்ததால் இன்னொரு நாள் வருவதாக கூறி விடைபெற்றேன்.

எனக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கிய ஜீவ்ஸ், ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வந்த இம்சைஅரசி, ஷைலஜா அக்கா, அருமையான சமையல் செய்து உபசரித்த திருமதி. ஜீவ்ஸ் அனைவருக்கும் நன்றி.